ஆஸ்திரேலிய சிறார்களுக்கு டிசம்பர் முதல் யுடியூப்பும் தடை!

0
6

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடையில் யுடியூப்பையும் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இத்தடை அமுலுக்கு வரும்.

உலகம் முழுதும் இளம் தலைமுறையினர் இடையே சமூக வலைதள பயன்பாடு அதிகரித்துள்ளது. பாடசாலை மாணவர்களும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பதால் அவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படுகின்றது என பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மன ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன், பல குற்றச் செயல்களுக்கும் வழிவகுக்கிறது.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. இதற்கமைய 16 வயதுக்குட்பட்டோர் ‘டிக்டாக், பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாது.

இந்நிலையிலேயே மேற்படி வரிசையில் தற்போது யுடியூப்பையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தடையின் கீழ், யுடியூப் வீடியோக்களை பார்க்க முடியும். ஆனால் பதிவேற்றம் செய்யவோ, யுடியூப் கணக்கை வைத்திருக்கவோ அனுமதி கிடையாது.

டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் பாதுகாப்பு தனது அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸி தெரிவித்தார்.

சைபர் புல்லிங், ஆபாசமான உள்ளடக்கம், அதிகப்படியான திரை நேரம் ஆகியவை கவலைக்குரியவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குழந்தைகள் யூடியூப்பை பயன்படுத்த முடியும், ஆனால் அவர்களுக்கென தனி யூடியூப் சேனல்களை வைத்திருக்க அனுமதி கிடையாது. பத்தில் ஒன்பது ஆஸ்திரேலியர்கள் இந்த முடிவை ஆதரிக்கின்றனர். எதிர்காலத்தில் இதேபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த மற்ற நாடுகளுக்கு இது ஒரு முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here