சீனி தொழிற்சாலைகளை பாதுகாக்க அரசாங்கத்தால் முடியவில்லை!

0
5

80 களில் தாபிக்கப்பட்ட நமது நாட்டின் இரண்டு தேசிய வளங்களான பெல்வத்த மற்றும் செவனகல சீனி உற்பத்தி அரச நிறுவனங்கள் தற்போது மிகவும் சரிவைச் சந்தித்து வருகின்றன. பெல்வத்த, செவனகல சீனி தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடி குறித்து அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் விளக்கி, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நான் உரத்து குரல் எழுப்பினேன். இறுதியாக பெல்வத்த மற்றும் செவனகல எதிர்கொள்ளும் நெருக்கடியை அரசாங்கம் வேடிக்கையாக எடுத்து விட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பெல்வத்த சீனி நிறுவனம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட சந்த மதுரா ராம வளாகத்தில் இன்று (01) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் பொய்களையும், ஏமாற்றுதல்களையும், மக்களை தவறாக வழிநடத்துவதையுமே மீண்டும் மீண்டும் செய்து வருகிறது. ஜனாதிபதி அண்மையில் வெளிநாடு சென்று நாடு ஒரு டிரில்லியன் கணக்கான டொலர்களை சேமித்துவிட்டதாகவும், பொருளாதாரம் நிலைபெற்றுள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் முன்னேறி, அரச நிதி சேமிக்கப்பட்டு, வீண்விரயம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது பொய்யான கருத்தாகும். ஜனாதிபதி தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தால் பெல்வத்த மற்றும் செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலைகளை பாதுகாக்க முடியாதுபோயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 இவ்வளவு பணம் இருந்தால், இந்த நிறுவனங்களை ஏன் காப்பாற்ற முடியாது?

போதுமான பணம் இருந்தால், பல மாதங்களாக செலுத்தப்படாத ஊழியர் சேமலாப நிதியைச் செலுத்தியிருக்க முடியுமல்லவா? பெல்வத்த நிறுவனம் மாத்திரம் 3240 இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. 230 இலட்சம் ரூபாவை, 3 மாதங்களுக்கு மிகை ஊதியமாக செலுத்த வேண்டியுள்ளதோடு, இலங்கை வங்கிக்கு 15000 இலட்சம் ரூபா கடனையும் செலுத்த வேண்டி காணப்படுகின்றன. மேலும் 3000 இலட்சம் கடனும் புதிதாகவும் எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குக் கூட 3000 இலட்சம் ரூபாவும், விநியோகஸ்தர்களுக்குக் கூட 4000 இலட்சம் ரூபாக்களையும் செலுத்த வேண்டி காணப்படுகின்றன என்ற எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 இந்த அரசாங்கத்துக்கு வெறும் பேச்சு மட்டும் தான்!

பெல்வத்த சீனி நிறுவனத்தின் மூலம் 5700 விவசாயிகள் பொருளாதார ரீதியான நலன்களைப் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய எரிபொருள் மற்றும் உர மானிய உதவிகளை முறையாக பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர். 3795 ஊழியர்கள் இங்கு காணப்படுகின்றனர். இவர்களின் ஊழியர் சேமலாப நிதியை அரசாங்கம் செலுத்த வேண்டும். இந்த அரசாங்கம் வெறும் பேச்சுக்களை பேசாமல் அதனை நடைமுறையில் களத்தில் யதார்த்தமாகவும் செய்து காட்ட வேண்டும். உலகம் நாடுகளுக்கு பயணம் செய்து வெறும் பேச்சுக்களை பேசினால் மாத்திரம் போதாது. இந்த பெல்வத்த செவனகல நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அடிமையாகிவிட்டது.

பெல்வத்த, செவனகல சீனி தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் கடுமையான கடன் நிதி நெருக்கடிக்கு அரசாங்கத்திடம் காணப்படும் நிதியைக் கொண்டு பணம் செலுத்தப்பட வேண்டும். 18% VAT வரியை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன். மதுபானங்கள் மீது இந்த வரியை விதிக்குமாறு கூறினாலும் கூட அரசாங்கம் அதனை செய்வதாக இல்லை. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படிந்துள்ளமையே இதற்குக் காரணமாகும். புதிய சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை எட்டுவோம் எனக் கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது, ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு, முந்தைய அரசாங்கத்தின் நிபந்தனைகளை அதே வழியில் முன்னெடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு சுட்டிக்காட்டினார்.

🟩 இந்த அரசாங்கம் Fail

நமது நாட்டின் தேசிய சீனி உற்பத்தித் தொழில் அழிக்கப்பட்டு வருகிறது. பெல்வத்த மற்றும் செவனகல நிறுவனங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை. இந்த VAT வரிகளை நீக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் அரசாங்கத்திடமிருந்து எந்த தீர்வும் இல்லை. விவசாயிகளைப் பாதுகாப்போம், வறுமையை ஒழிப்போம், அரச நிறுவனங்களைப் பாதுகாப்போம் என கூறிய இந்த அரசாங்கம் இறுதியில் இவற்றில் தோல்வி கண்டுள்ளது. இந்த வினைதிறனற்ற பலவீனமான நிர்வாகத்தால் அரச நிறுவனங்கள் வீழ்ச்சி கண்டு வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த தொழிலாளர்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க அரசாங்கம் தயாராக இல்லை என்றால், ஐக்கிய மக்கள் சக்தி ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்குத் தயாராக உள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here