ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் கம்சட்கா தீபகற்பத்தில் 475 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக எரிமலை ஒன்று குமுறத் தொடங்கியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்கில் 8.8 ரிச்டர் அளவிலான சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்தது செயலற்று இருந்த எரிமலை குமுறத் தொடங்கியுள்ளது.
ஸ்மித்சோனியன் எரிமலை தரவுத்தளத்தின்படி, கடைசியாக 1550 ஆம் ஆண்டு குமுறியதாக கூறப்படும் க்ராஷென்னினிகோவ் என்றழைக்கப்படும் இந்த எரிமலையில் இருந்து சாம்பல் புகை வெளியேறும் படங்களை ரஷ்ய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இந்த புகை 6,000 மீட்டர் உயரத்தை எட்டியதாக கம்சட்காவின் அவசரகால சூழ்நிலைகள் அமைச்சு டெலிகிராமில் பதிவிட்டுள்ளது.
“எரிமலையிலிருந்து கிழக்கு பசிபிக் பெருங்கடலை நோக்கி புகை மூட்டம் பரவி வருகிறது. அந்த பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதிகள் எதுவும் இல்லை, மேலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாம்பல் விழுந்ததாக பதிவு செய்யப்படவில்லை,” என அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐரோப்பா மற்றும் ஆசியாவில் மிக அதிகமாக செயல்படும் மற்றொரு எரிமலையான கிளைச்செவ்ஸ்காய் புதன்கிழமை வெடித்ததைத் தொடர்ந்து இந்த எரிமலை வெடித்துள்ளது.
ஸ்மித்சோனியன் எரிமலை தரவுத்தளத்தின்படி, கிளைச்செவ்ஸ்காய் எரிமலை குமுறல் மிகவும் பொதுவாக நிகழும். 2000 ஆம் ஆண்டு முதல் குறைந்தது 18 முறை குமுறியுள்ளது.
இரண்டு எரிமலை குமுறல்களும் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தை தொடர்ந்து ஏற்பட்டுள்ளன.
பூகம்பத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஜப்பானில் இருந்து ஹவாய் முதல் ஈக்வடார் வரையிலான கரையொர பகுதிகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தன.
ரஷ்யாவில் செவெரோ-குரில்ஸ்க் துறைமுகம் ஊடாக சுனாமி பேரலைகள் தாக்கி மீன்பிடி ஆலையை மூழ்கடித்தது.
2011 ஆம் ஆண்டு ஜப்பானுக்கு அருகில் 9.1 ரிச்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுனாமி பேரலைகள் தாக்கி 15,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதிலிருந்து இது மிகவும் வலுவானதாக காணப்படுகிறது.