“வளமான நாடு அழகான வாழ்க்கை” திட்டத்தின் கீழ், அனுராதபுரத்தின் வரலாற்றுச் சிறப்பைப் பாதுகாக்கவும், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிமையான சூழலை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்ட கும்பிச்சன்குளம் நவீன மாதிரி நகரப் பூங்கா அபிவிருத்தி திட்டம் வர்த்தக, வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இந்தப் பூங்காவில் சிற்றுண்டிச் சாலை, பொழுதுபோக்குப் பூங்கா, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா மற்றும் நவீன புதுமையான பிரிவுகள் உள்ளடங்கவுள்ளன. உலகளாவிய புதிய படைப்புகளுக்கு ஏற்ப நவீன நகரப் பூங்காவாக இது அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் உருவாக்கப்படும்.
இந்நிகழ்வில் அனுராதபுர நகர சபை தலைவர் என். கருணாரத்ன, வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், உள்ளூர் ஆட்சி அதிகார சபைகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இத்திட்டம் அனுராதபுரத்தின் சுற்றுலா மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.