மலையகத்துக்கான உதவிகள்; இந்திய உயர் ஸ்தானிகருடன் பிரதீப் கலந்துரையாடல்!

0
6

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பெருந்தோட்டம் , சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று (05) கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் இடம்பெற்றது.

இதன்போது மலையக மக்களுக்கான உதவித்திட்டங்களை ஒரு மாவட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் மலையக மக்கள் செறிந்து வாழும் 12 மாவட்டங்களுக்கும் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்திய அரசாங்கம் இதுவரையில் இலங்கைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற உதவிகளுக்கும் ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவித்த பிரதியமைச்சர் பிரதீப், கடந்த காலங்களிலும் அவ்வாறே, நிகழ்காலத்திலும் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் பெருமனம் கொண்டு வாழ்த்துவதாக இந்திய உயர் ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.

இதன்போது தமது அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகரிடம் பிரதியமைச்சர் பிரதீப் விரிவாக எடுத்துரைத்தார். அதில் விசேடமாக விஞ்ஞான ,தொழிநுட்ப வினைத்திறன் பயிற்சி வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல் , மலையக பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல், பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வசதியளிக்கக்கூடிய ஓய்வறைகளை நிர்மாணித்தல், பாடசாலைகளுக்கான கற்றல் கற்பித்தல் விஞ்ஞான உபகரன சாதனங்கள் மற்றும் மாணவர்களின் திறன் அபிவிருத்தி உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற சுமார் 10க்கும் மேற்பட்ட வேலைத் திட்டங்கள் தொடர்பாக காத்திரமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மலையக மக்கள் செறிந்து வாழும் 12 மாவட்டங்களுக்கும் முன்னுரிமைப்படுத்தி இவ்வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலின் போது பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரிதியமைச்சரின் ஆலோசகரும் பிரத்தியேக செயலாளருமான கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம், ஒருங்கிணைப்பு செயலாளர்களான வசந்தமூர்த்தி, சிவனேசன் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here