பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது

0
2

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் ஹைதர் அலி, இங்கிலாந்தில் குற்றவியல் விசாரணை தொடர்பாக மான்செஸ்டர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கடந்த ஜூலை 23 ஆம் திகதி மான்செஸ்டரில் உள்ள ஒரு இடத்தில் நடந்ததாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பானது என்று கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிக்கையில், 24 வயதான ஹைதர் அலி தொடர்பான குற்றவியல் விசாரணை குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் ஜூலை 17 முதல் ஓகஸ்ட் 6 வரை நடைபெற்ற பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நிகழ்ந்ததாகவும் கூறியுள்ளது.

பெக்கன்ஹாம் மைதானத்தில் ஷாஹீன்ஸ் அணி விளையாடிக் கொண்டிருந்தபோது ஹைதர் கைது செய்யப்பட்டதாகவும், அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிசிபி, ஹைதர் அலிக்கு சட்ட ஆதரவு வழங்குவதாகவும், இங்கிலாந்து சட்ட நடைமுறைகளை முழுமையாக மதிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால், விசாரணை முடியும் வரை ஹைதர் அலியை தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

“விசாரணை முடிவடைந்து அனைத்து உண்மைகளும் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, பிசிபி தனது நடத்தை விதிகளின் கீழ் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையை வைத்திருக்கிறது,” என்று பிசிபி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸாரின் அறிக்கையின்படி, “ஓகஸ்ட் 4 ஆம் திகதி பாலியல் வன்கொடுமை குறித்த முறைப்பாடு பெறப்பட்டதை அடுத்து, 24 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளோம். இந்த சம்பவம் ஜூலை 23 ஆம் திகதி மான்செஸ்டரில் நடந்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் தற்போது பிணையில் உள்ளார், மேலும் பாதிக்கப்பட்டவருக்கு அதிகாரிகள் ஆதரவு வழங்கி வருகின்றனர்.”

ஹைதர் அலி, 2020 இல் அறிமுகமானதிலிருந்து பாகிஸ்தான் அணிக்காக 35 டி20 மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2020 இல் நடந்த 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய இவர், இந்த தசாப்தத்தில் பாகிஸ்தானின் மிகவும் திறமையான இளம் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இருப்பினும், 2021 இல் பாகிஸ்தான் சூப்பர் லீக் நிகழ்வில் கொவிட் -19 விதிகளை மீறியதற்காக இவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். விசாரணை முடியும் வரை பிசிபி மேலதிக கருத்துகளை வெளியிடாது என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here