தீராத வலி, தொடரும் போராட்டம் – துரைராசா ரவிகரனின் உரை

0
26

தமிழ்த்தேசிய இனத்தின்மீது பேரினவாத இலங்கை அரசு கடந்த காலங்களில் மேற்கொண்ட இனவழிப்புச் செயற்பாடுகள் தற்போது, கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகளாக நீட்சிபெற்றுக் காணப்படுவதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டுச் சந்திப் பகுதியில் நேற்று (14) இடம்பெற்ற செஞ்சோலை வளாகப் படுகொலை நினைவேந்தலில் பங்கேற்று கருத்துரையாற்றும்போது அவர் இந்தவிடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சோகமயமான ஒரு தருணத்திலே நாம் அனைவரும் ஒன்றுகூடியிருக்கின்றோம். குறிப்பாக பிள்ளைகளை இழந்த பெற்றோர், சகோதரர்கள், உறவினருமாக கண்ணீர்சொரிந்து சோகத்தை வெளிப்படுத்தி

கொடூர செஞ்சோலைப்படுகொலை நினைவுகளுடன் இருக்கின்றீர்கள். நாமும் அந்த கொடூர படுகொலையின் கனத்த அந்த நினைவுகளைச் சுமந்தவர்களாக இருக்கின்றோம்.

ஏற்கனவே நாம் குறித்த விமானத் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் அஞ்சலிகளைச் செலுத்திவிட்டுத்தான் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளோம். உலகில் மிகக் கொடூரமான தாக்குதல்களை, படுகொலைகளை மேற்கொண்ட இராணுவங்களில் இலங்கை இராணுவமுமொன்றாகும்.

வெள்ளைச் சீருடையோடு கல்விகற்கச்சென்ற எமது பிள்ளைகளின்மீது விமானம் குண்டுமழைபொழிந்தது. எமது பிள்ளைகளின் வெள்ளைச் சீருடைகள் குருதியால் நனைந்து சிவப்புச் சீருடையாக மாறியிருந்தகோலம், உடல்கள் சிதறிக்கிடந்த நிலமை, இத்தகைய கெடூரமான சம்பவத்தை யாரும் மறந்துவிடமுடியாது.

இந்த கொடூரம் இடம்பெற்றும் 19 ஆம் ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் கதறி அழுது தமது சோகத்தை வெளிப்படுத்துகின்றபோது, இந்தக் கொடூர படுகொலை இன்றளவும் எந்த அளவிற்கு மனங்களில் தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றதென்பதை நன்கு உணரமுடிகின்றது. இது என்றுமே மறக்கமுடியாத ஆறாத வலியாகும்.

இலங்கை இராணுவம் கடந்த காலத்தில் வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் வருடம் முழுவதும் தமிழ் இனப்படுகொலையை மேற்கொண்டது. அவ்வாறு இராணுவத்தால் தமிழினப்படுகொலை மேற்கொள்ளப்பட்டமைக்கான சான்றுகளு, ஆதாரங்களும் தற்போது தாயகப்பரப்பின் பல்வேறிடங்களிலுமிருந்தும் வெளிப்பட்டுவருகின்றன.

எமக்கான விடிவு கிடைக்கவேண்டுமென்ற நோக்குடனும், தமிழ்த்தேசிய இனமான நாங்கள் எம்மை நாமே ஆட்சி செய்யவேண்டுமென்ற நோக்குடனும் எமது தமிழர் தாயகத்தை வழிநடத்திக்கொண்டிருந்த எம்முடைய தலைவனின் விடுதலைப் போராட்டக் கட்டமைப்பை உலகநாடுகள் இணைந்து அழித்த வரலாறு உங்கள் அனைவருக்கும் தெரியும்.

தற்போது தமிழர்கள் நாங்கள் நலிவடைந்தவர்களாக, அடிமைகளாக இருக்கின்ற நிலைகள் காணப்படுகின்றன. தமிழர்தாயகத்தில் தமிழர்களுக்கு எதுவுமில்லையென்ற நிலையாகிவிட்டது. கடலிலே தொழில் செய்யமுடியாத நிலைமை, ஆறு மற்றும் குளங்களில் தொழில்செய்யமுடியாதநிலை, வயலில் தொழில் செய்யமுடியாதநிலையென எமது தமிழ் மக்கள் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முடக்கப்பட்டுள்ளனர்.

எமது தமிழ்மக்களின் காணிகள் திட்டமிட்டவகையில் அபகரிக்கப்படுகின்ற நிலமைகள் காணப்படுகின்றன. நிலமில்லையேல் எமக்கு எதுவுமில்லை. குறிப்பாக வனவளத் திணைக்களத்திடம் மாத்திரம் 4,32,486 ஏக்கர் காணிகள் காணப்படுகின்றன. ஆனால் விடுதலைப்புலிகளின் காலத்தில் 2,22,006 ஏக்கர் நிலங்களே வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. இந்நிலையில் கடந்த 2009ஆம் அண்டிற்குப் பிற்பாடு 02 இலட்சத்திற்கும் மேற்பட்ட நிலங்களை வனவளத் திணைக்களம் அபகரித்துவைத்திருக்கின்றது.

இவ்வாறு அரச திணைக்களங்களால் எமது தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தமிழர்கள் முடக்கப்படுகின்ற நிலையில் எமது மக்கள் பெருமளவானோர் தாயகப்பரப்பிலிருந்து புலம்பெயர்ந்து செல்கின்ற நிலமைகளும் காணப்படுகின்றன. இவ்வாறாக தாகப்பரப்பில் தமிழர்களின் பெருக்கம் குறைவடைந்து செல்கின்ற நிலமைகளும் ஏற்படுகின்றன.

அந்தவகையில் கடந்தகாலத்தில் இலங்கை அரசால் தமிழ் இனஅழிப்புக்கள் மேற்கெள்ளப்பட்டன. தற்போது தாயகப்பரப்பிலுள்ள எமது தமிழ்தேசிய இனத்தின்மீது கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகளை இலங்கை அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது.

கடந்தகால அரசாங்கங்கள் மிகஅதிகளவில் ஆக்கிரமிப்பக்களையும், அபகரிப்புச் செயற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டிருந்தன. தற்போதைய அரசும் அந்த நிலையிலிருந்து மாறுபட்ட ஒரு அரசாகத் தெரியவில்லை. எமது மக்களின் அபகரிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படுமெனக் கூறுகின்றார்களே தவிர விடுவிப்பதாகத் தெரியவில்லை.

அந்தவகையிலே தற்போது நாம் செஞ்சோலைப் படுகொலையில் உயிரிழந்தவர்களை அஞ்சலிப்பதற்கு கூடியிருக்கின்றோம். இத்தகைய படுகொலைகளைச் செய்தவர்களுக்கு இறைவனால் உரிய தீர்ப்புக்கிடைக்கும் என நம்புகின்றோம். குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ பேராதரவுடன் ஆட்சிப்பொறுப்பேற்று அந்த மக்களாலேயே துரத்தியடிக்கப்பட்ட வரலாறுகளை நாம் கண்டிருக்கின்றோம்.

எனவே தமிழ்த்தேசிய இனத்தின்மீது இனவழிப்பை மேற்கொண்ட, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை மேற்கொள்கின்றவர்கள் அதற்கு உரிய பொறுப்புக்கூறலைச் செய்கின்ற காலம் வரும். உரிய தீர்வுகிட்டும். அதற்காக நாம் அனைவரும் காத்திருப்போம். படுகொலைகளின்போதும், எமக்கான விடுதலைக்காகவும் போராடியவர்களுக்கும் தொடர்ந்தும் அஞ்சலிகளைச் செலுத்துவோம். என்றும் அவர்களை நினைந்திருப்போம் – என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here