அண்மைக்காலமாக மலையக பிரதேசங்களில் மக்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதிகளில் சிறுத்தைபுலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது என சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், மலையகத்தில் மக்கள் அதிகம் செறிந்து வாழும் நகர்ப்புறங்களான ஹட்டன், தலவாக்கலை, நோர்வூட், பொகவந்தலாவை, மஸ்கெலியா ஆகிய பிரதேசங்களை அண்மித்த பகுதிகளிலும் சிறுத்தைபுலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் மக்கள் மிகுந்த அச்சத்துக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்குள் நுழைந்து செல்லப்பிராணிகளை தூக்கிச்செல்வதும் பகல் நேரங்களில் எம் உறவுகள் தொழில் புரியும் தோட்டப்பகுதிகளில் அச்சுறுத்துவதாகவும் எம்மிடம் பலர் தெரிவித்திருந்தனர்.
எமது நாட்டுக்கே உரிய சமகாலத்தில் மிகவும் அருகி வரும் சிறுத்தை புலி இனத்தை காப்பது எமது கடமையாகும். ஆனால் அதே நேரம் எமது மக்களை காப்பதும் எமது கடமை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அட்டைக்கடிக்கும், குளவிகளின் தாக்குதலுக்கு மத்தியிலும் வாழ்வாதாரத்துக்காக களமிறங்கி தொழிலுக்கு செல்லும் எம் மக்களுக்கு இது ஒரு பெரும் தலையிடியாய் அமைந்திருக்கிறது. இப்போதே இது தொடர்பில் உரியவர்கள் கவனம் செலுத்தினால் உயிர்ச்சேதங்களின்றி ஒரு தீர்வை காணக்கூடியதாக இருக்கும். நாட்கள் செல்ல செல்ல, காலம் தாழ்த்தி இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதால் இழப்புகள் தவிர்க்க முடியாமல் ஆகும்.
இன்று இது ஒரு பிரச்சினையே இல்லாமல் இருக்கலாம், ஆனால் எதிர்காலத்தில் இது மிகப்பாரதூரமானதொரு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய விடயமாக மாறும் என்பதை கருத்தில் கொண்டு உரியவர்கள் உடனடியான, நிரந்தர தீர்வுகளை மேற்கொள்வதே சிறந்தது என்பதே என்னுடைய வேண்டுகோள்.
மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்திருக்கிறார்கள், மலையகத்தில் அதுவும் நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். வாக்களித்த மக்களுக்கு ஒரு பிரச்சினை எனும்போது கூட சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதி காப்பது வேதனையளிக்கிறது.
தவறுதலாக ஒரு சிறுத்தை புலி இறந்தால் கூட அதற்காக குரலெழுப்ப இலங்கையின் ஏகப்பட்ட அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் எம் சக உறவுகளுக்காக குரல் கொடுக்க நாம் மட்டுமே இருக்கிறோம்.
மனித – யானை மோதல் என்னும் அளவுக்கு இந்த பிரச்சினை வளர்ந்து விடாமல் ஆரம்பத்திலேயே ஒரு நிரந்தர தீர்வினை கண்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென அச்சத்துக்கு மத்தியில் வாழும் பொதுமக்கள் சார்பில் உரியவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்திருந்தார்.