தி.மு.க.விற்கும், எங்களுக்கும் தான் போட்டி : விஜய்க்கு தமிழிசை பதில்

0
9

நெல்லையில் இன்று மாலை நடைபெறும் பா.ஜ.க. பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசுகிறார்.

இதில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார்.

அங்கு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

மிஸ்டர் பி.எம். என்று நடிகர் விஜய் கூறுவதை மக்கள் ரசிக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரை ஒப்பிட்டு இவர் பேசுகிறார். மாநாட்டிற்கு பிளாக்கில் சாப்பாட்டிற்கு டிக்கெட் கொடுக்கிறார்கள். புதிய வரவு நம்மை ஒன்றும் செய்யாது. பா.ஜ.க. பலம் பொருந்திய கட்சியாக வந்து கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கும், எங்களுக்கும் தான் போட்டி.

தாமரை இலையில் தண்ணீர் ஒட்ட வேண்டாம். தாமரை தண்ணீரில் வளரப்போகுது, மலர போகுது, தாமரை இலையில் ஏன் ஒட்ட வேண்டும்? அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு பா.ஜ.க. வளரப்போகுது. தம்பி விஜய் இதனை பார்ப்பார்.

தமிழக முதலமைச்சர் அப்பா என்று கூப்பிட சொல்கின்றார். இவர் அங்கிள் என்ற குறிப்பிடுகிறார். விஜய்க்கு எழுதிக் கொடுத்தவர் அவ்வாறு எழுதி கொடுத்துவிட்டார் போல, நானே பயந்து விட்டேன்.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பொருந்தாதது என்ற விஜய் கூறுகிறார். அவருக்கு என்ன அரசியல் தெரியும்? அரசியல் ஞானம் இருக்கின்றதா? கச்சத்தீவு மீட்பு பற்றி பேசுகிறார். இதிலிருந்து அவருக்கு அரசியல் ஞானம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

பாரத பிரதமர் என்ன செய்தார் என்று கேட்கின்றார். சினிமா வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி தான் காரணம். நடிகர் விஜய் தனி விமானத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அந்த அளவிற்கு விமான நிலையம் முன்னேற்றி இருக்கின்றது. நாடு முன்னேறி இருக்கின்றது.

தூத்துக்குடி விமான நிலையத்தை எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் விஜய்யால் ஒரு மாநாட்டை ஒழுங்காக நடத்த முடிந்ததா? ஒரு கொடியை ஒழுங்காக நட முடிந்ததா?. எனவே இவர் சொல்வதை பொருட்படுத்த தேவையில்லை. அ.தி.மு.க. பாஜக கூட்டணி வெற்றி பெறும்.

இருமொழிக்கொள்கை வேண்டாம் என்று சொல்லவில்லை. அனைவரும் அதில் தான் படித்துக் கொண்டு வந்தோம். நாடு விரிவடையும்போது, தேசம் விரிவுபடும்போது உலக அரங்கில் நாடு முன்னேறும்போது 3 மொழி தேவைப்படுகிறது. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிற்கு 3 மொழிகளில் டுவீட் செய்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தனியார் பள்ளியில் 2 மொழி தான் சொல்லிக் கொடுக்கின்றீர்களா? என்று வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். தி.மு.க. கட்சிக்காரர்கள் நடத்தும் பள்ளிகளில் 3மொழி உள்ளது. 3 மொழி படித்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகம் வளர்ந்து இருக்கிறது. அதில் அனைவரின் பங்கு இருக்கிறது.

தி.மு.க. காங்கிரஸ் ஆட்சி செய்தபோது இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழை பற்றி பேசும் தகுதி உங்களுக்கு உள்ளதா? தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here