காசாவில் நடந்த போர் தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிராக புதிய தடைகளைப் பெறத் தவறியதால், டச்சு வெளியுறவு அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் வெள்ளிக்கிழமை மாலை ராஜினாமா செய்துள்ளார்.
காசா நகரம் மற்றும் ஏனைய அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக புதிய நடவடிக்கைகளைக் கொண்டுவர விரும்புவதாக வெல்ட்காம்ப் நாட்டின் நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார், ஆனால் இந்த விடயத்தில் அவரது கூட்டணியினரின் ஆதரவைப் பெற முடியவில்லை.
61 வயதான இஸ்ரேலுக்கான முன்னாள் தூதரான அவர், செய்தியாளர்களிடம், “கொள்கையை நானே செயல்படுத்தவும், எனக்குத் தேவையான போக்கை வகுக்க”வும் முடியவில்லை என்று உணர்ந்ததாகக் கூறியுள்ளார்.
வெல்ட்காம்பின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அவரது மைய-வலது புதிய சமூக ஒப்பந்தக் கட்சியின் மீதமுள்ள அமைச்சரவை உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர், இதனால் டச்சு அரசாங்கம் குழப்பத்தில் மூழ்கியுள்ளது.
” நாங்கள் அதை முடித்துவிட்டோம்,” என்று கட்சித் தலைவர் எடி வான் ஹிஜும் சுருக்கமாக கூறினார், இஸ்ரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் “சர்வதேச ஒப்பந்தங்களுக்கு முற்றிலும் எதிரானவை” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கடநத ஜூன் மாதத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு சட்டமன்ற உறுப்பினர் கீர்ட் வைல்டர்ஸ் குடியேற்றம் தொடர்பான சிக்கலில் நாட்டின் நான்கு கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறியபோது டச்சு அரசாங்கம் ஏற்கனவே சரிவை சந்தித்தது.
மீதமுள்ள மூன்று கட்சிகளும் அக்டோபரில் தேர்தல்கள் நடத்தப்படும் வரை ஒரு காபந்து அரசாங்கத்தில் நீடித்தன.
சர்வதேச உணவு பாதுகாப்பு அமைப்பொன்று காசா பகுதியின் மிகப்பெரிய நகரம் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவி மீதான கட்டுப்பாடுகள் முடிவுக்கு வராத பட்சத்தில் பிரதேசம் முழுவதும் அது தொடர வாய்ப்புள்ளது என்றும் கூறியது.
இதேநேரம் இஸ்ரேலுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் குறித்த விவாதத்தை நெதர்லாந்து நாடாளுமன்றம் பலமுறை தாமதப்படுத்தியது,
இவ்வாறான பல காரணங்களால் வெளிவிகார அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.