முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறைச்சாலைகள் திணைக்களத்தால் அவருக்கு உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.
வைத்தியசாலை வளாகத்திற்குள் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏழு சிறைக்காவலர்கள் மற்றும் நான்கு சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் ஜகத் வீரசிங்க உறுதிப்படுத்தினார்.
சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளும் அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
தேசிய வைத்தியசாலையின் துணை இயக்குநர் வைத்தியர் ருக்ஷன் பெல்லனா, முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை வழமைக்கு கொண்டு வருவதில் தீவிர சிகிச்சைப் பிரிவின் சிறப்புக் குழு ஒன்று ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல எதிர்க்கட்சி பிரதிநிதிகள் ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்று வந்துள்ளனர்.
தனியார் வெளிநாட்டுப் பயணத்திற்காக 16.6 மில்லியன் ரூபாய் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.