பிரபு வர்க்கத்துக்கு சட்டம் இல்லையா!

0
5

பிரபு வர்க்கத்திற்குச் சட்டம் இல்லை என்ற நிலையை மாற்றியுள்ளதாக, மூத்த அமைச்சா்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அமைச்சர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

ரணில் கைது என்பது மிகச் சாதாரண விடயம் எனவும், சட்டம் தன் வேலையை செய்வதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கா கூறுகிறார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கருத்து வெளியிட்ட அமைச்சர், ரணில் கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் அல்ல எனவும் சுட்டிக்காட்டினார். ரணில் கைதானமை சிலருக்குப் பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் ஊழல் மோசடி அதிகாரத் துஸ்பிரயோகம் தொடர்பாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் பிமல் ரத்நாயக்கா தெரிவித்தார்.

அதேவேளை, நாளை 26ம் திகதி செவ்வாய்க்கிழமை ரணிலுக்கு பிணை வழங்கி வழக்கு தொடர்வது அல்லது தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படுவது குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கும் என அமைச்சர் கே. டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

மேல் வர்க்கத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்து நிலை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும், சட்டம் எல்லோருக்கும் சமனானது எனவும் அமைச்சர் லால்காந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் நடவடிககைகள் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரகாரம் செயற்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

அரச சொத்துக்களையும் பொதுச் சொத்துகளையும் தவறாக பயன்படுத்தும் எந்த ஒரு அரசியல்வாதிகள் மீதும் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும், இதனை அரசாங்கத்தின் பழிவாங்கள் என அர்த்தப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட சட்டம் மக்களுக்கானது மக்களை பாதுகாப்பதற்கானது. மக்களின் வரிப் பணத்தை அரசியவ்வாதிகள் மிக இலகுவாக சூறையாடிச் செல்வதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அமைச்சர் லால்காந்த மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here