வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைமை காரியாலயத்தின் தற்போதைய நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையிலான குழுவினர், அதனை மீள புனரமைப்பது தொடர்பிலும் ஆராய்ந்துள்ளனர்.
வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் வியாழக்கிழமை (28) வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ சுகிர்தனுடன் காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள வலி. வடக்கு பிரதேச சபையின் தலைமை காரியாலயத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
காங்கேசன்துறையில் அமைந்திருந்த பிரதேச சபையின் தலைமை காரியாலயம் யுத்தம் காரணமாக சுமார் 36 வருடங்களுக்கு முன்னர் அவ்விடத்தில் இயங்காமற்போனது. அதேவேளை அப்பகுதிகள் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் வலி. வடக்கு பகுதிகள் இராணுவத்தினரால் சிறிது சிறிதாக விடுவிக்கப்பட்ட நிலையிலும் காங்கேசன்துறை பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வேளை வலி. வடக்கு பிரதேச சபை தலைமைக் காரியாலயம் கொல்லங்கலட்டி பகுதியில் மீண்டும் இயங்க ஆரம்பித்தது.
இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர், தலைமைக் காரியாலயம் அமைந்திருந்த பகுதி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட நிலையில், தலைமைக் காரியாலயத்தை மீண்டும் காங்கேசன்துறை பகுதிக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர்.
இந்நிலையிலேயே, நேற்றைய தினம் உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையிலான குழுவினர், தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள பகுதிக்கு நேரில் சென்றதுடன், கட்டடங்களை மீள் நிர்மாணம் செய்வது, புனரமைப்பது தொடரில் நேரில் ஆராய்ந்துள்ளனர்.
அதேவேளை வறுத்தலைவிளானில் அமைந்துள்ள Night Soil Plantஇனை இயங்கவைப்பது தொடர்பாகவும் நேரில் சென்று ஆராய்ந்தனர்.