நட்பை வெளிப்படுத்தி கொண்ட மோடியும் ட்ரம்பும்

0
22

இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்ததால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

இதையடுத்து அந்த நிகழ்ச்சியை விமர்சித்திருந்த ட்ரம்ப, சீனா ரஷ்யா மற்றும் இந்திய தலைவர்களின் புகைப்படங்களையும் பகிர்ந்து இருண்ட சீனாவிடம் இந்தியாவையும் ரஷ்யாவையும் இழந்துவிட்டதாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்தியாவுடனான உறவைப் புதுப்பிப்பீர்களா? என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர்.

இதற்கு ட்ரம்ப் கூறியதாவது இதை நான் கண்டிப்பாக செய்வேன். பிரதமர் நரேந்திர மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் மிகச் சிறந்த பிரதமர். குறிப்பிட்ட நேரத்தில் அவர் செய்தது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயானது பலம் வாய்ந்த உறவு, எனவே அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை.

இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு நீண்டகாலமாக உள்ளது. எப்போதாவதுதான் இதுபோன்ற தருணங்கள் வருகின்றன. நான் எப்போதும் மோடியுடன் நன்றாக பழகி வருகிறேன். ரஷ்யாவில் இருந்து இந்தியா இவ்வளவு எண்ணெய் வாங்கும் என்பதில் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.

நான் அதை அவர்களுக்கு தெரியப்படுத்தினேன். நாங்கள் இந்தியாவின் மீது மிகப் பெரிய வரியை விதித்தோம். 50 சதவீதம் மிக அதிகமான வரி. உங்களுக்கு தெரியும். அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்தார். பிரதமர் மோடியுடன் நான் மிக வும் நன்றாக பழகுகிறேன். இவ்வாறு அதிபர் ட்ரம்ப தெரிவித்தார்.

பிரதமர் மோடி வரவேற்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் கருத்தை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று பதிவிட்டார். அதிபர் ட்ரம்பின் செய்தியாளர்கள் சந்திப்பு விடியோவை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி,

“அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் உணர்வுகளையும், எங்கள் உறவுகள் குறித்த அவரது நேர்மறையான வெளிப்பாட்டையும் மிகவும் பாராட்டுகிறேன். இதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் எதிர்நோக்கு மிக்க விரிவான மற்றும் உலகளாவிய பயனுள்ள கூட்டாண்மையைக் கொண்டுள்ளன” என்றார் மோடி.

இதன்மூலம், கடந்த சில நாள்களாக விரிசல் ஏற்பட்டிருந்த அமெரிக்க இந்திய உறவு மீண்டும் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here