யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்: பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன்!

0
10

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான சபலென்காவும், அமெரிக்க வீராங்கனையும், போட்டித் தரவரிசையில் 8-ம் நிலையில் இருப்பவருமான அமண்டா அனிசிமோவாவும் மோதினர்.

இதில் சபலென்கா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் அனிசிமோவாவை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து கொண்டார். இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் நீடித்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி இறுதிச் சுற்றின்போது, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி, பட்டத்தை சபலென்கா கைப்பற்றியிருந்தார். தற்போது தொடர்ந்து 2-வது முறையாக யுஎஸ் ஓபன் பட்டத்தை அவர் வென்றார்.இதன்மூலம், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸுக்கு பிறகு அமெரிக்க ஓபன் பட்டத்தை தொடர்ச்சியாக வென்ற வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். செரீனா வில்லியம்ஸ் 2012-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் தொடர்ச்சியாக பட்டம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

27 வயதான பெலாரஸ் வீராங்கனை சபலென்கா கைப்பற்றியுள்ள 4-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். அவர் யுஎஸ் ஓபன் பட்டத்தை 2 முறையும் (2024, 2025), ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 2 முறையும் (2023, 2024) வென்றுள்ளார்.

ரூ.44 கோடி பரிசு தொகை: யுஎஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் கோப்பையை வென்ற சபலென்காவுக்கு சுமார் ரூ.44 கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. 2-வது இடத்தை பிடித்த அனிசிமோவா சுமார் ரூ. 22 கோடியைத் தட்டிச் சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here