ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

0
65

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை (08) ஆரம்பமாகிறது.

இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரையாற்றவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜெனீவாவில் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க் மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இடையே விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இதனிடையே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரான சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா கூறியுள்ளார்.

இந்த அமர்வில் நாட்டிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பான வரைவு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியுறவு அமைச்சிடம் கையளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க்கின் இலங்கைக்கான விஜயத்தின் பின்னர் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பதில் அறிக்கை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பதில் அறிக்கையில்,

“வெளிப்புற தலையீடுகள் தேசிய ரீதியான முயற்சிகளைத் தடுக்கவும் மக்களை துருவப்படுத்தவும் மட்டுமே உதவும் என்று இலங்கை அவதானித்துள்ளது.

எனவே, சர்வதேச நடவடிக்கை தொடர்பாக அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள முடிவுகள் மற்றும் பரிந்துரைகளுடன் இலங்கை அரசாங்கம் உடன்படவில்லை.

இனம், மதம், வர்க்கம் மற்றும் சாதி அடிப்படையில் எந்தப் பிரிவினையோ அல்லது பாகுபாடோ இல்லாமல் அதன் மக்களின் பன்முகத்தன்மையை மதிக்கும் மற்றும் அனுபவிக்கும் ஒரு நாட்டை நோக்கிச் செயல்படுவதற்கான ஆணையை அரசாங்கம் பெற்றுள்ளதுடன், அந்த நோக்கத்திற்காக அரசாங்கம் வலுவாகவும் உண்மையாகவும் உறுதிபூண்டுள்ளது.

இலங்கையில் இனவெறி அல்லது தீவிரவாதம் மீண்டும் எழுவதைத் தடுப்பது அரசாங்கத்தின் முழுமையான உறுதிப்பாடாகும்.

எனவே, இலங்கை ஒரு உள்நாட்டு பொறிமுறை மூலம் முன்னேறும்போது, ​​சர்வதேச சமூகத்தின் புரிதல் மற்றும் ஆதரவை இலங்கை வரவேற்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here