தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் வெளியீட்டிற்கான பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இட்லி கடை படத்தில் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பார்த்திபன், தனுசுடன் நடித்த அனுபவம் பற்றியும் படத்தை பற்றியும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “‘Mischievous’ பார்த்திபன் Missssschivous தனுஷிடமிருந்து ஒரு பட்டம்! குறும்பு அரும்புவதே விரும்பும் போதும், அல்லது விரும்பப்படும் போதும்! இன்னமும் நான் ரசிகர்களால் விரும்பப்பட, படாத பாடு படுகிறேன்.’இட்லி கடை’யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன். தனுஷுடன் பணியாற்றும் முதல் அனுபவம். கிடைத்த மிகக் குறுகிய அவகாசத்தில் முற்றிலும் ரசித்தேன் அவரை ஒரு முழுமையான கலைஞனாக. அது பற்றி 14-ல் நேருக்கு நேர் நேரும்!குழிக்குழியான பாத்திரத்தில் நிரப்பப்படும் மாவே இட்லி. ஆர்.அறிவு என்ற கௌரவப் பாத்திரத்தில் இட்டு நிரப்பப்பட்டிருக்கிறேன் நான். இந்த ஆர் அறிவை ரசிகர்கள் தங்கள் பேரரறிவை கொண்டு கமென்ட்டில் கொண்டாடுவது மகிழ்ச்சி. இட்லி கடையின் கதைக்கு இணையாக இங்கிலீஷில் சொல்வதானால்…. It tally with a tale of ‘Italy shop’ by Danish” என்று பதிவிட்டுள்ளார்.