சுவீடன் நாட்டின் புதிய சுகாதாரத்துறை மந்திரியாக எலிசபெத் லான்(வயது 48) நேற்று நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன், துணை பிரதமர் எப்பா புஷ் மற்றும் எலிசபெத் லான் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
நேரலையில் நிகழ்ந்த இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, சுகாதாரத்துறை மந்திரி எலிசபெத் லான் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக துணை பிரதமர் எப்பா புஷ் உள்பட, அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஆகியோர் ஓடிச் சென்று எலிசபெத்திற்கு உதவி செய்தனர். பின்னர் அவரை அங்கிருந்து வெளியே கொண்டு சென்று, மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.
இந்த நிலையில், சிகிச்சைக்கு பிறகு எலிசபெத் லான் தனது உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், ரத்த சர்க்கரை அளவு குறைந்ததால் தனக்கு தீடீர் மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பதவியேற்ற சிறிது நேரத்தில் சுகாதாரத்துறை மந்திரி மயங்கி விழுந்த சம்பவம் சுவீடனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.