பெரம்பலூர் செல்ல இயலாமைக்கு வருத்தம் தெரிவித்துள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், மற்றுமொரு நாளில் நிச்சயம் வருவதாக உறுதி அளித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை வெளியட்டிருந்த விஜய், முதல் கட்டமாக நேற்று திருச்சியில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.
நேற்று அரியலூர், குன்னம், பெரம்பலூர் நகரங்களில் நேற்று அவர் பிரசாரத்துக்குச் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அதிக அளவில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூடியதால் பெரம்பலூர் பயணம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது.
தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி.
வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது.
எனவே அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்” என தெரிவித்துள்ளார்.