முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு சரியான மதிப்பை வழங்க இந்த அரசாங்கம் தயாராக இல்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தனக்கு ஏற்ற வசதி கிடைத்த பின்னர் மகிந்த ராஜபக்ச கொழும்புக்கு மீளவும் திரும்புவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் ஓய்வு வாழ்க்கைக்கான வசதிகளை வழங்குவது அரசின் கடமை என தெரிவித்துள்ள அவர், தற்போதைய அரசாங்கம் மகிந்தவிற்கு சரியான மதிப்பை வழங்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்கும் சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதனையடுத்து கொழும்பில் அரச வீடுகளில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதிகள் அந்த வீடுகளில் இருந்து வெளியேறினர்.
இதன்படி, கடந்த 11ஆம் திகதி கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியேறி தங்காலையில் அமைந்துள்ள தனது பூர்வீக வீட்டில் குடியேறினார்.
அரசாங்கம் நிறைவேற்றியுள்ள இந்த சட்டமூலத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பின்னணியில் சஞ்சீவ எதிரிமான்ன இவ்வாறு கூறியுள்ளார்.
இதனிடையே, இன்று அல்லது நாளை அரசாங்க வீட்டில் இருந்து வெளியேறிவிடுவேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதற்கான தயார்ப்படுத்தல்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் ஊடகவியளார்களிடம் தெரிவித்துள்ளார்.
ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்தில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வீட்டுவசதி மற்றும் அமைச்சரவை அமைச்சர்களுக்கு வசதிகளை வழங்கும் ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அந்தச் சட்டத்தின்படிதான் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டன. புதிய அரசாங்கம் புதிய சட்டமூலத்தின் ஊடாக அந்த சலுகைகளை ரத்து செய்துள்ளது.
அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2017 முதல் 2025 வரையான கடந்த ஒன்பது ஆண்டுகளில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோருக்காக 490 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல்களை மேற்கோள் காட்டி கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியம், உத்தியோகபூர்வ இல்லங்களின் பராமரிப்பு, வாகனங்கள் மற்றும் பிற செலவுகளுக்காக இவ்வாறு பணம் செலவிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.