கலேவெல மற்றும் பண்டாரதுவ பகுதிகளில் புதையல் தோண்டும் நோக்கத்தில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர் .
கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதிபொல பகுதியில் நேற்று (14) மாலை முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அகழ்வுக்காக சந்தேக நபர்கள் பயன்படுத்திய பல உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர்கள் மாதிபொல, வெலிகந்த, மில்லவான, தம்மின்ன, தெஹியத்தகண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 28-58 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் பண்டாரதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரியாய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நவகிரியாயவ, கோனாகொல்ல பகுதியைச் சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.