தெஹ்ரானிலிருந்து இரண்டு கொள்கலன் களினூடாக ஒருதொகை போதைப்பொருள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதென்று சர்வதேச புலனாய்வுப் பிரிவு அறிவித்தும் பாது காப்புத் தரப்பினர் ஏன் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை? எம்மீது பழியைச் சுமத்தி போதைப்பொருள் வியாபாரிகளையும் பாதாளக் குழுக்களையும் பாதுகாக்க வேண்டாம். அத்துடன், 323 கொள்க லன்கள் விடுவிப்பு விவ காரத்தை அரசாங்கம் மூடி மறைக்கிறதென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் மீதான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரை யாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘சகல இலக்குகளையும் அடைந்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. விடுவித்தவரை கண்டுபிடித்தால் கொள்கலன்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம். இவர்கள் அரசாங்கத்தில் உள்ளார்கள். ஆனால் நாங்கள் கொள்கலன்களை விடுவித்ததாக எம்மீது பழி சுமத்துகிறார்கள்.
மக்களை ஏமாற்றி, வரையறையற்ற வகையில் பொய் சொன்ன அரசாங்கமே இந்த அரசாங்கம் காணப்படுகிறது. தற்போது குடு அரசாங்கமாக மாறியுள்ளது. தமது குறைபாடுகளை மறைத்துக் கொள்ள பிறர் மீது பழிபோடும் கொள்கையில் இருந்துகொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.
போதைப்பொருள் பற்றி பேசப்படுகிறது. உண்மையை கண்டுபிடியுங்கள். போதைப்பொருள் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். சர்வதேச புலனாய்வுப் பிரிவு தெஹ்ரானில் இருந்து இரண்டு கொள்கலன்கள் ஊடாக போதைப்பொருள் தொகை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. பொலிஸார் சோதனை செய்துள்ளார்கள். ஆனாலும் விடுவிக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் போதைப்பொருள் இருப்பதாக தற்போது குறிப்பிடப்படுகிறது. பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் என்ன இருந்தது.
பழைய முறையில் நாட்டை நிர்வகிக்கலாம் என்று அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறது. அந்த பழைய காலம் முடிவடைந்து விட்டது. கொள்கலன்களை விடுவித்து விட்டு எம்மை தூற்றாதீர்கள். புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் ஏன் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் பற்றி கிடைத்த புலனாய்வுத் தகவல்களை அலட்சியப்படுத்தி யவர்கள் இந்த அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளார்கள். தற்போதும் புலனாய்வுத் தகவல்களை அலட்சியப்படுத்துகிறார்கள்.
உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத்தாக்குதலின் பழியையும் எம்மீது சுமத்தினீர்கள். குண்டுத் தாக்குதல்தாரிகளின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர். குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்த உட்பட பலருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கடமையை செயற்படுத்தாத இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப் படவில்லை. அவர்களுக்கு உயர் பதவிகளை வழங்கியுள்ளீர்கள்.
எம்மீதான பகைமையை பிறிதொரு வழியில் தீர்த்துக்கொள்ளுங்கள். போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாளக் குழுக்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். எம்மீது குற்றஞ்சாட்டும்போது உண்மை குற்றவாளிகள் தப்பித்துக்கொள்வார்கள். ஆகவே பொறுப்புடன் செயற்படுங்கள். என்றார்.




