தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை என்பதற்கு நானே சாட்சி என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதன் பின் ஏற்பட்ட படுகொலைகள் அனைத்திற்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 தொடக்கம் 18ஆம் திகதி வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இருந்துள்ளனர்.
அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத நிலையில் பசில் ராஜபக்சவுடன் பேசுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதான செயலக பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் என்னுடன் பேசினார்கள்.
நமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் அந்த செய்தியை உரிய தரப்பினரிடம் கொண்டு போய் சேர்க்குமாறு என்னிடம் கோரிக்கை முன்வைத்தார்கள்.
அதன் பிரகாரம் பசில் ராஜபக்சவுக்கு குறித்த செய்தியை கொண்டு போய் சேர்த்தேன் 17 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச நாட்டுக்கு வருகை தந்ததும் பாதுகாப்பு சபை கூட்டத்தில் நான் பசில் ராஜபக்சவுடன் பேசிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்படும் என்றார்.
அந்த இணக்கப்பாட்டுடன் மறைந்த மன்னராயர் இராசப்பு யோசப் மற்றும் கிங்சிலி ஆகியோருடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு சென்று மக்களை அழைத்து வர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயங்கள் மே மாதம் 16ஆம் திகதி இரவு 8 மணி அளவில் பேசப்பட்டது.
ஆனால் நிலைமைகள் மாறி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் இருந்த மக்களை இலங்கை இராணுவம் இனப்படுகொலை செய்தது.
இதற்கு நானே சாட்சி விடுதலைப் புலிகள் இறுதி நேரத்தில் தான் என்னுடன் தொடர்பு கொண்டார்கள் ஏனெனில் அரசியல் கலக்காமல் சில விடயங்களை அவர்கள் கையாள முனைந்திருக்கிறார்கள் அது சாத்தியப்படவில்லை.
என்னிடம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க உரிய தரப்பினரிடம் விடையங்களை கொண்டு போய் சேர்த்தேன் ஆனால் கூறப்பட்ட விடயங்களுக்கு மாறாக இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.
இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் புலிகள் இறுதி யுத்த களத்தில் கூட அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை .
அவர்கள் என்னுடன் பேசிய மே 16 அம் திகதி தொடக்கம் இறுதி யுத்த களத்தில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான பொதுமக்களுக்கு நானே சாட்சி என மேலும் தெரிவித்தார்