இலங்கையில் சீதாராமன் அரண்மனை அமைப்பதற்கு இந்தியா தொடர்ச்சியான பங்களிப்பு வழங்குமென, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
இன்று (12) முற்பகல் பண்டாரவளை பொது விளையாட்டரங்கில் மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
இந்த சிறப்பு நிகழ்வில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது இந்திய-இலங்கை உறவுகளில் நீண்டகால நட்பைக் குறிக்கும் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும். இது இந்திய-இலங்கை மக்களுக்கு இடையிலான பிரிக்க முடியாத பிணைப்புகளின் அடையாளமாகும். இந்தியாவும் இலங்கையும் கலாசார ரீதியாக இரட்டைச் சகோதரர்கள். நமது கடந்த காலத்தை விட பிரகாசமான எதிர்காலத்திற்காக நாம் ஒன்றாக அடியெடுத்து வைக்கிறோம்.
சகோதர இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நாம் எப்போதும் ஆதரவளிக்கிறோம். அதன்போது வீட்டுவசதி, கல்வி, திறன் அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாடு போன்ற துறைகளில் சிறந்த ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறோம். அந்த வகையில் மலையக மக்களுக்கான இந்த வீட்டுத் திட்டம் மிக முக்கியமானதாகும்.
இலங்கையின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 65,000 க்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் திட்டங்களுக்கு நாங்கள் பங்களித்து வருகிறோம். மேலும், தோட்டப் பகுதியில் வைத்தியசாலையை நிர்மாணித்தல், மாத்தளையில் மகாத்மா காந்தி சர்வதேச மையத்தை நிர்மாணித்தல் ஆகியவற்றிலும் நாங்கள் பங்களித்துள்ளோம், மேலும் பிள்ளைகளின் கல்விக்கு விசேட பங்களிப்பைச் செய்து வருகிறோம். இவை தோட்டப் பகுதியில் உள்ள தமிழ் சமூகத்திற்காக தொடங்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் ஒரு பகுதி மாத்திரமே ஆகும். கடந்த ஆண்டு, நாம் STEM ஆசிரியர் பயிற்சி வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தோம். இந்தத் திட்டங்களை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம். மேலும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக சீதாராமன் அரண்மனையின் அபிவிருத்தித் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளோம்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்ட படி, இலங்கையின் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பது குடும்ப அங்கத்தவரின் பொறுப்பு என நாங்கள் உணர்கிறோம். இலங்கையின் அனைத்து மக்களினதும் அபிவிருத்திக்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும் என்ற திருவள்ளுவரின் குறளுக்கு இணங்க அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும் என்பதை நினைவூட்டி, இலங்கை மக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்திற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்த இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிது சமன் ஹென்னாயக, ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, உட்பட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.