மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களை கைப்பற்றினார். இதுவரை மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 19 விக்கெட்களை வேட்டையாடியுள்ளார்.
மேலும், அந்த அணிக்கெதிராக 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்களையும், 9 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்களையும் அவர் சாய்த்து சுழற்றுவதில் சூரர் என நிரூபித்துள்ளார்.
அதேபோல் இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களில் (ரிஸ்ட் ஸ்பின்னர்) டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்களை கைப்பற்றியவர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் பெற்றுள்ளார்.
இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 முறை, 5 விக்கெட்களை குல்தீப் கைப்பற்றியுள்ளார். இந்தப் பட்டியலில் குல்தீப் யாதவுடன், இங்கிலாந்து வீரர் ஜானி வார்டில் (5 முறை 5 விக்கெட்) இணைந்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணி வீரர் பால் ஆடம்ஸ் 4 முறை 5 விக்கெட்களை டெஸ்ட் போட்டியில் சாய்த்துள்ளார்.
3 முறை: மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர் ஷாய் ஹோப்பை, டெஸ்ட் போட்டிகளில் 3 முறை வீழ்த்தியுள்ளார் குல்தீப். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 6 இன்னிங்ஸ்களில் ஷாய் ஹோப்புக்கு எதிராக பந்துவீசியுள்ள குல்தீப், 3 முறை அவரை அவுட்டாக்கியுள்ளார்.
HinduTamil