இஸ்ரேல் – காசா மோதல் முடிவுக்கு வந்தது. இது நான் நிறுத்திய 8-வது போர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 240-க்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் கடுமையான பதிலடியைத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளாக நீடித்த இந்த பதிலடியில் 65000-க்கும் அதிகமானா பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். காசா உருக்குலைந்து கிடக்கிறது. போர் சாவுடன் பட்டினிச் சாவும் தலைவிரித்தாடத் தொடங்கியது.
இந்தச் சூழலில் காசா மீதான இஸ்ரேல் தாக்குதகை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று உலகம் முழுவதும் இருந்து குரல் எழுந்தது. இந்நிலையில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காசா – இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டு ஒரு 20 அம்சத் திட்டம் ஒன்றை அறிவித்தார். இதனை முன்வைத்து இஸ்ரேல் – ஹமாஸ் தரப்பிடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. இருதரப்பும் உடன்பட்ட நிலையில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாராகிக் கொண்டிருக்க, இஸ்ரேலும் காசா மீதான தாக்குதலை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் பயணப்படுகிறார். தனது அதிகாரபூர்வ விமானமான ஏர் ஃபோர்ஸ் 1 விமானத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தப் போர் ஓய்ந்தது. இனி எல்லாம் இயல்பாக இருக்கப்போகிறது என்று நான் நம்புகிறேன். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே அமைதி ஏற்படுவதில் கத்தாரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முன்னெடுப்புகளும் பாராட்டுக்குரியது.
ஹமாஸ் தரப்பிலிருந்து எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட இருக்கிறார்கள். காசா மீள் கட்டமைப்பை உறுதி செய்ய விரைவில் ஓர் அமைதிக் குழு உருவாக்கப்படும். இந்தப் போர் முடிவுக்கு வந்ததில் யூதர்கள், இஸ்லாமியர்கள், அரபு நாட்டவர் என அனைவருமே மகிழ்ச்சியாக உள்ளனர்.
இது நான் நிறுத்தியுள்ள 8-வது போர். இப்போது ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே போர் நடப்பதாகக் கேள்விப்பட்டேன். அந்தப் போர் குறித்து நான் திரும்பி வந்ததும் பார்க்க வேண்டும். ஏற்கெனவே நான் இன்னொரு போரையும் நிறுத்தும் முயற்சியில் உள்ளேன் (ரஷ்யா – உக்ரைன்). நான் போர்களை நிறுத்துவதில் வல்லவன். இவ்வாறு ட்ரம்ப் கூறினர்.
இதற்கிடையில் ஹமாஸ் தரப்பு தான் விடுவிக்கவுள்ள 20 பிணைக் கைதிகளின் பெயர்களை அறிவித்துள்ளது.
HinduTamil