உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின் 78 ஆவது மாநாடு இன்று (13) முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த 78 ஆவது மாநாட்டை இலங்கை நடத்துகிறது.
உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய பொறுப்பதிகாரி கத்ரீனா போஹ்மே ஆகியோரும், 8 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார அமைச்சர்கள், இரண்டு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் பிற வல்லுநர்கள் இந்த அமர்வில் பங்கேற்கவுள்ளனர்.
இதில் அவர்கள் எதிர்வரும் ஆண்டுகளுக்கான பிராந்திய சுகாதார நிகழ்ச்சி நிரலை உருவாக்குவார்கள்.
வலுவான முதன்மை சுகாதார சேவைகள் மூலம் ஆரோக்கியமான முதுமையை அடைவது மற்றும் புகையிலை இல்லாத சூழலுக்கு எதிரான போராட்டம் ஆகியவை 78வது பிராந்திய குழு அமர்வில் சுகாதாரத் தலைவர்கள் கலந்துரையாடும் பிரதான அம்சங்கள் ஆகும்.
தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார அவசர நிதியத்தின் இருப்பு விரிவாக்கம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் பற்றி உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் இதில் விரிவாக கலந்துரையாடி, எதிர்கால முடிவுகளை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிராந்திய மாநாட்டில் முக்கிய சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும், கடந்த ஆண்டுகளின் தீர்மானங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து மக்களின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல், பாதுகாத்தல், மற்றும் சுகாதாரம் தொடர்பான நிலையான வளர்ச்சி இலக்குகளை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை புதுப்பித்தல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.