யாழில்.வாளுடன் உலாவும் இளைஞன் – கைது செய்ய முடியாது திணறும் பொலிஸ்!

0
55

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் வாளுடன் நடமாடும் இளைஞன் வீதியில் செல்வோர் மீது தாக்குதல் நடாத்துவதுடன், வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்தும் தாக்குதல்களை மேற்கொள்வதனால் , அக்கிராமத்தில் இருந்து 06 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்

குறித்த இளைஞனை கைது செய்வதற்காக மருதங்கேணி பொலிஸார் இன்றைய தினம் சனிக்கிழமை இராணுவம் மற்றும் பொலிஸ் அதிரடி படையினரின் துணையுடன் விசேட நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போதிலும் இளைஞனை கைது செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குடத்தனை கிழக்கு , மாளிகைத்திடல் கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் , வாளுடன் பொது வெளிகளில் நடமாடி திரிந்து , வீதியில் செல்வோரை அச்சுறுத்துவதும் , சில வேளைகளில் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதனையும் வழமையாக கொண்டுள்ளார்.

அத்துடன் வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் இருப்போரை அச்சுறுத்தி அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இளைஞனின் இத்தகைய செயற்பாடு காரணமாக அக்கிராமத்தில் இருந்து 06 குடும்பங்கள் வெளியேறியுள்ளன.

குறித்த இளைஞன் தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு ஊரவர்கள் பல தடவைகள் அறிவித்த போது , பொலிஸார் கிராமத்திற்குள் நுழையும் போதே , இளைஞன் கிராமத்தில் இருந்து தப்பியோடி காட்டு பகுதிகளுக்குள் தலைமறைவாகி விடுவார்.

இளைஞனின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை இராணுவத்தினரின் துணையுடன் அக்கிராமத்தை பொலிஸார் சுற்றிவளைத்து இளைஞனை கைது செய்ய விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்த வேளை, இளைஞன் கிராமத்தில் இருந்து தப்பியோடி தலைமறைவானதால் , இளைஞனை கைது செய்ய முடியவில்லை. அதனால் பொலிஸார் தமது நடவடிக்கையை கைவிட்டு திரும்பினர்.

jaffnazone
Image – Meta AI

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here