ஆளும் தரப்பினர் பாடசாலைகளுக்கு மூடுவிழா நடத்துகின்றனர் – சஜித் சாடல்!

0
56

ஒரு பாடசாலை திறக்கப்படும் போது, ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்று பழமொழியொன்று காணப்படுகின்றது. இருக்கும் பாடசாலைகளை மூடுவதை விடுத்து, தற்போதுள்ள பாடசாலை முறையை வலுப்படுத்தும் நடவடிக்கையையே நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பாடசாலை கட்டமைப்பில் காணப்பட்டு வரும் பௌதீக மற்றும் மனித வளங்கள் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்து, காலத்துக்கு ஏற்றால் போல் நவீன இற்றைப்படுத்தப்பட்ட கல்வித் திட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தகவல் தொழிநுட்பக் கல்வி, ஆங்கில மொழி மற்றும் பிற மொழி அறிவு உள்ளிட்ட கல்வியை, சிறுவயதிலிருந்தே வழங்குவதற்கே பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்து வந்தோம். அன்று “பிரபஞ்சம்” வேலைத்திட்டங்களைப் பார்த்து பரிகசித்த தற்போதைய ஆளும் தரப்பைச் சோர்ந்தோர், இன்று பாடசாலைகளை மூடும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அன்று பிரபஞ்சம் திட்டத்தைப் பார்த்து சிரித்தவர்கள், இன்று அமைச்சுப் பதவிகளை வகித்துக் கொண்டு நாட்டை ஆட்சி செய்தாலும், நாட்டின் கல்வித்துறைக்காக எதனையும் மேற்கொள்வதாக தெரியவில்லை. கல்வியில் காணப்பட்டு வரும் ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவதற்கு நாம் பிரபஞ்சம் திட்டம் ஊடாக நடவடிக்கை எடுத்தோம். பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக, பாடசாலைகளை மூடும் திட்டங்களை தற்போதைய ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நொச்சியாகம, துணுமடலாவ, புராண ஸ்ரீ போதிருக்கராம விகாரையில் இன்று இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சியில் இருக்கும் என்னால் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாது. ஜனாதிபதி பதவியையும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையையும் வைத்துக்கொண்டிருக்கும் தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தபாடில்லை. திட்டமிட்ட வகையில் பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு நாம் இடமளிக்க முடியாது. இதற்காக வேண்டி எதிர்க்கட்சி முடயுமான சகல நடவடிக்கைகளையும் எடுக்கும்.

அரசாங்கமும் ஜனாதிபதியும் இருக்கத்தக்க, ​​மக்கள் தமது பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவரிடமே முன்வைக்கின்றனர். தலைநகரில் உள்ள செல்வந்தர்களைத் தொடர்பு கொண்டு, கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். பாடசாலைகளை மூடும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும். பாகுபாடு இல்லாமல் பாடசாலைகளைப் பாதுகாக்க அமைதியான முறையிலும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தொழிலாள வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம், ஆசிரியர் பற்றாக்குறையை உருவாக்கி, பிள்ளைகளை அரச பாடசாலைகளிலில் இருந்து நீக்கி, பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. நாட்டு மக்களை நெருக்கடிகளுக்கு ஆளாக்கும் இந்த அரச கொள்கையை எதிர்க்க நாம் வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here