“கோமாளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பிறகு “லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி நடித்து வரவேற்பை பெற்றார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்தது. அதன்பிறகு, “டிராகன், டியூட்” போன்ற படங்களில் நடித்து அடுத்தடுத்து ரூ.100 கோடி வசூலை கொடுத்து கவனத்தை பெற்றார்.
இந்த நிலையில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய நண்பரும், லவ் டுடே படத்தில் உதவி இயக்குநருமாக பணியாற்றிய ரமேஷ்க்கு பரிசாக கார் வாங்கிக் கொடுத்துள்ளார். இது மட்டும் இல்லாமல், காரைக் கொடுக்கும்போது, ” சிறப்பான வேலை செய்து வருகிறீர்கள். உங்களது விஸ்வாசத்துக்கு எனது சிறிய அன்புப் பரிசு. இது தொடக்கம் தான். நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கு. ரொம்பவும் நன்றி, லவ் யூ” என்று சொல்லி ஒரு முத்தமும் கொடுத்து காரை அன்பளிப்பாக கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
காரை பரிசாக பெற்ற இயக்குநர் ரமேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “என்னுடைய முதல் கார். என்னுடைய நண்பனிடமிருந்து…வெறும் பரிசு அல்ல, நம்பிக்கை மற்றும் நாங்கள் பகிர்ந்து கொண்ட பயணத்தின் சின்னம். இந்த அழகான நினைவுக்கும், எப்போதும் என்னை நம்பியதற்கும் நன்றி . இந்த தருணம் எப்போதும் பயணத்தையும் நாங்கள் கட்டியெழுப்பிய பிணைப்பையும் எனக்கு நினைவூட்டும். இது காரை விடவும் நீடிக்கும் ஒரு நினைவு.” என்று பதிவிட்டுள்ளார்.




