ஆனால் டிரம்ப் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், “நியூயார்க் மேயராக மம்தானி தேர்வு பெற்றால் அங்கு பொருளாதார, சமூக பேரழிவு ஏற்பட்டு நிலைமை மோசமாகி விடும். இதனால் நியூயார்க் நகரத்துக்கு அதிக நிதி ஒதுக்க முடியாது” என்று டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், அமெரிக்க அரசின் குடியேற்ற நடவடிக்கைகளில் மம்தானி குறுக்கிட்டால் அவரை கைது செய்ய நேரிடும் என்றும் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்தார்.
இந்த சூழலில், மேயர் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளரை வீழ்த்தி ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி பெற்றார். இதன் மூலம் நியூயார்க் நகரின் முதல் முஸ்லீம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையை ஜோஹ்ரான் மம்தானி பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்திக் கொண்டிருந்த மம்தானியும், டொனால்டு டிரம்ப்பும் வெள்ளை மாளிகையில் இன்று சந்தித்துக் கொண்டனர். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக இருவரும் நட்பாக பேசிப் பழகியதோடு, கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய டிரம்ப், “மம்தானிக்கும் எனக்கும் நிறைய விஷயங்களில் ஒத்துப்போகிறது. அவருடன் நிகழ்ந்த சந்திப்பு மிகவும் அருமையானதாக இருந்தது. நியூயார்க் நகர மேயராக மம்தானி சிறப்பாக பணியாற்றுவார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக டிரம்ப் பாசிச கொள்கை கொண்டவர் என்று மம்தானி விமர்சித்திருந்தார். அதனை குறிப்பிட்டு செய்தியாளர்கள் இன்று மம்தானியிடம், “டிரம்ப் பாசிச கொள்கை கொண்டவர் என்று நீங்கள் கூறியதை தற்போது மீண்டும் உறுதி செய்கிறீர்களா?” என்று கேட்டனர். அதற்கு மம்தானி பதிலளிக்க முற்பட்டபோது டிரம்ப் குறுக்கிட்டு, “ ஆமாம் என்று சொல்லிவிடுங்கள், விளக்கம் சொல்வதை விட அது எளிதானது” என்றார். இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது.