அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொடையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியில் வெற்றியை தொடர்ந்து மேலும் மூன்று இடங்களில் பேரணிகளை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது.
அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
அடுத்த பேரணி இரத்தினபுரி, அதைத் தொடர்ந்து மாத்தறை மற்றும் குருநாகல் போன்ற பகுதிகளில் நடைபெறும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்ச ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தப் பேரணி மிகப்பெரிய வெற்றியாகக் கருதுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (22) ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி தெரிவித்திருந்தார்.
“நாங்கள் ஒன்றாக வேலை செய்யப் போகிறோம் என்பதை நேற்று காட்டினோம். யாரும் பின்தங்கப் போவதில்லை. இந்த நாட்டில் மீண்டும் பட்டத்து இளவரசர்கள் பிறக்க மாட்டார்கள்,” என்று பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் மீண்டும் ஒன்றிணைவதற்கு வழிவகுத்தால், தனது அரசியல் வாழ்க்கையை தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை காட்டப்பட்ட ஒன்றுபட்ட முயற்சி எனவும், கட்சியின் தலைமையை நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கும் முயற்சி அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாறாக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்ட சக்தியாக இருப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதற்கான முயற்சி என்று ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றுபடுவது கட்டாயமாகும். நான் பிரச்சனையாக இருந்தால், நான் ஒதுங்கிக் கொள்கிறேன்” என்று ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.




