ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைவிற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலகத் தீர்மானித்தால் அது பொறுத்தமானதொரு முடிவு அல்ல. ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவத்தோடு, சஜித் பிரேமாச உட்பட அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடாகும்.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஜய பெரேரா தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ரணில் விக்கிரமசிங்க அனுபவம்மிக்க தலைவர். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டவர். அவர் பதவி விலகுவதை நாம் விரும்பவில்லை.
ரணில், சஜித் என இரு தரப்பு உறுப்பினர்களும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
எதிர்காலத்தில் அமையவுள்ள எமது நாட்டை வழிநடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவம் அவசியம். அவர் ஆலோசகராகவேனும் பதவி வகிக்கலாம்.” – என்றார் சுஜித் சஞ்ஜய பெரேரா.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதற்கு தான் தயார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைவதற்கு தான் தான் தடையென கருதப்படுமானால் இந்த முடிவை எடுக்க தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போதே ரணில் இவ்வாறு தெரிவித்தாரென செய்திகள் வெளியாகி இருந்தன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் இருந்து மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




