இலங்கைக்கு அவசர கடன் மறுசீரமைப்பு!

0
21

டிட்வா புயலால் ஏற்பட்ட பேரழிவை இலங்கை சமாளித்து வரும்நிலையில், நாட்டின் கடன் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகளை தற்காலிமாக இடைநிறுத்த வேண்டுமென்று உலகின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர்கள் குழு அறிவிப்பு விடுத்துள்ளது.

சுற்றுச்சூழல் அழிவுகளின் அளவைக் கருத்திற்கொண்டு, நாட்டின் கடன் மீள செலுத்துதல் நடவடிக்கைகளை நிர்வகிக்கக்கூடிய நிலைமைக்கு மீட்டெடுக்கும் வகையில் புதிய கடன் மறுசீரமைப்பொன்றை முன்னெடுக்க வேண்டுமென்றும் அந்தக் குழு அறிவித்துள்ளது.

நோபல் பரிசு வென்ற பொருளியலாளர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் உட்பட 120 உலகளாவிய நிபுணர்கள் அடங்கிய குழு இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற இந்திய அபிவிருத்தி பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ், சமத்துவமின்மை தொடர்பான நிபுணர் தோமஸ் பிக்கெட்டி, முன்னாள் அர்ஜென்டினா பொருளாதார அமைச்சர் மார்ட்டின் குஸ்மன் மற்றும் டோனட் எகனாமிக்ஸின் ஆசிரியர் கேட் ராவொர்த் ஆகியோரால் கையொப்பமிடப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும்,

நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். அத்துடன் ஆயிரக்கணக்கான வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், ‘நமது வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவு’ என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம், 2022 ஆம் ஆண்டிலிருந்து திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்களை மீளச் செலுத்த தவறியநிலையில், கடன் வழங்குநர்களுடனான நீண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நாட்டின் 09 பில்லியன டொலர் தேசியக் கடன்தொகையானது கடந்த ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. ஆனால், இலங்கையை பொறுத்தவரையில் வரி செலுத்தும் பொதுமக்கள் மீதான சுமை முடிவுறாத நிலையில் இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

டிட்வா புயலின் தாக்கத்துக்கு முன்பாக, வருடாந்த மீளச் செலுத்தல் அரசாங்க வருவாயில் மொத்தம் 25 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது சர்வதேச மற்றும் வரலாற்று தரங்களின்படி உயர்ந்த மட்டமாகும்.

புயல், பரவலான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கடுமையான பொருளாதார அதிர்ச்சியை இலங்கை இப்போது எதிர்கொள்கிறது. இது உள்கட்டமைப்பு, வாழ்வாதாரங்கள் மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கையின் வெளிநாட்டு கடன் செலுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்த வேண்டும். புதிய சூழ்நிலைகளில் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் ஒரு புதிய மறுசீரமைப்பு முன்னெடுக்கப்பட வேண்டும்.

2024 கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்குப் பின்னர், சில முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கப்படும் திருப்பிச் செலுத்தும் செயற்பாடுகளின்போது “எயார் கட்” ஐ ஏற்றுக்கொண்ட பின்னரும் தனியார் துறை கடன் வழங்குநர்கள் அமெரிக்க அரசாங்கத்தை விட இலங்கைக்கு 40 சதவீதத்துக்கும் அதிக இலாபக் கடனை வழங்கத் தயாராக இருப்பதாக கடன் நீதி என்ற பிரசாரக் குழுவின் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

பேரிடரைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகளை சமாளிக்க, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 200 மில்லியன் டொலர் இலங்கை அரசாங்கம் அவசரக் கடனைக் கேட்டுள்ளது. ஆனால் இந்த “விரைவான நிதி கருவியின்” கீழ் வழங்கப்படும் தொகைகள் பொதுவாக மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த அறிவிப்பு தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் ஆராய்வு பிரிவின் பேராசிரியர் பிரியங்க தனுசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,

“கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளினூடாக 2043ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான கடன் தொகையை கீழ் மட்டத்தில் பேணும் வரையில் கால அவகாசத்தைப் பெற்று கொண்டுள்ளோம். தொடர்ந்து கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டால் இன்னும் பெரும் கடன் சுமை ஏற்படும். கடனுடன் இணைந்த வகையில் வட்டியும் இணையும். எனவே எதிர்காலத்தில் வட்டியுடன் கூடிய பெரும் கடன் சுமைக்கு இலக்காக வேண்டிவரும். அவ்வாறான சுமையை இலங்கையால் சமாளிக்க முடியாது. இலங்கை போன்ற சிறிய நாடு இவ்வாறு சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுப்பது என்பது சிறுபிள்ளை நெருப்புடன் விளையாடுவது போன்றதாகவும்.

மேற்குறிப்பிட்ட அறிக்கையை வெளியிட்ட குழுவினர் புதிய நிதிக் கொள்கைகளை நம்புபவர்கள். அந்த குழுவினரின் ஆலோசனைகளுக்கமைய செயற்பட்ட இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளன. தற்போதுள்ள சந்தர்ப்பத்தில் இதுபோன்ற குழுவினரின் ஆலோசனைகளுக்கமைய அரசாங்கம் தீர்மானங்களை எடுப்பதற்கு பதிலாக தற்போது வரை வந்த பயணத்தை அவ்வாறே தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே பொருத்தமானதாக இருக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here