தமிழ் அரசியல்வாதிகள் மக்களை தூண்டிவிட்டு திஸ்ஸ விகாரையை உடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், தமிழ் மக்கள் எவருக்கும் சிங்கள மக்களுக்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்பதை புரிந்துகொள்ளுமாறு சிங்கள மக்களின் கைகளையும் கால்களையும் பிடித்து கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
அதேபோல் காயங்களை பெரிதாக்காமல் அதற்கு மருந்து போட்டு ஆற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனேயே தான் செயலாற்றுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இது குறித்து நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“திஸ்ஸ விகாரையின் வரலாறு பற்றி எனக்கு தெரியாது. அந்த இடத்தில் விகாரை இருந்ததா இல்லையா என்பதை நான் அறியேன். 2018 ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் காலத்திலேயே அந்த விகாரை கட்டப்பட்டது. ஆனால் விகாரைக்குரிய இடத்தில் அந்த விகாரை அமைக்கப்படவில்லை. அந்த விகாரை அமைந்திருக்கும் காணி மக்களுக்குரிய காணியாகும்.
விகாரை அமைக்க ஒதுக்கப்பட்ட இடமும் வேறாக உள்ளது. மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதால் அங்குள்ள விகாராதிபதியிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வை எட்ட முயற்சி செய்தோம் ஆனால் அது நடக்கவில்லை. அதனால் நான் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களுக்கு இது குறித்து கலந்துரைட சென்றேன். அதன்போது இரு வராங்களில் இந்த பிரச்சினை தீர்க்கப்படுமென அங்குள்ள பீடாதிபதிகள் கூறினர்.
மறுமுனையில் இந்த விவகாரத்தில் இரு தமிழ் அரசியல்வாதிகள் எமது மக்களை தூண்டிவிடுகிறார்கள். அதில் முதலாவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி எமது மக்களை தூண்டிவிடுகிறார். எதிர்வரும் 3 ஆம் திகதி திஸ்ஸ விகாரையை இடிப்பதற்கு மக்களை அழைத்து வருவதாக அவர் கூறுகிறார்.
அரசியல் பின்புலம் இல்லாமல் அந்த வேலையை செய்ய முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை. நான் இதனை தடுக்கவே முயற்சித்தேன். அரசியல் வாதி என்ற வகையில் பிச்சைக்காரன் காயத்தை பெரிதாக்கி விடுவது எனது நோக்கமல்ல. மாறாக இத்தனை நாட்களாக காயத்துக்கு மருந்து போடுவதே எனது பழக்கமாக இருந்தது.
சுமந்திரன் மற்றும் ஸ்ரீதரனின் கட்சிகள் ஊடாக கீழ் மட்டத்திலுள்ள மக்களின் தலைகளுக்கு இந்த விகாரையை நாம் உடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை தினிக்கிறார்கள். அதன்படியே எதிர்வரும் 3ஆம் திகதி விகாரைக்குள் நுழைந்து அதனை உடைத்துவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
சிங்களவர்களின் கைகளை கால்களை வணங்கி கேட்கிறேன். தமிழ் மக்கள் எவரும் சிங்கள மக்களுக்கு எதிராக செயற்பட வேண்டும் என்று நினைக்கவில்லை.
அதேபோல், கஜேந்திர குமார் பொன்னம்பலம் மற்றும் ஸ்ரீதரன் எம்.பியின் கட்சிகளில் இருக்கின்ற பிரதேச சபை உறுப்பினர்கள் ஐவர் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்களுக்கு எதிராக நான் முறைப்பாட்டையும் செய்திருக்கிறேன். கண்ட இடத்தில் என்னை கொலைச் செய்வதாக அவர்கள் மிரட்டுகிறார்கள்.
24 ஆம் திகதி எனக்கு வந்த மிரட்டல் குறித்து 25 ஆம் திகதி காலையிலேயே நான் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டேன். பொலிஸார் அவர்களை கை செய்வதற்கு மாறாக 19 ஆம் திகதி அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வருமாறு B அறிக்கையை தயாரித்துள்ளனர்.
சிங்கள எம்.பி ஒருவருக்கு இந்த நிலை வந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்பதை நினைத்து பாருங்கள். எனக்கு இவ்வாறான பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்தால் தனது செயலாளரை அழைக்குமாறு ஜனாதிபதி எனக்கு அழைபேசி இலக்கத்தை தந்தார். ஆனால் அந்த இலக்கத்திற்கு அழைத்தால் அவர் தொடர்பில் வரவில்லை.
அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கும் அழைத்தேன் அவரும் தொடர்பில் வரவில்லை. நான் எங்கு சென்று முறைப்பாடு செய்வது. ஆனால் எனக்கு ஒரு துப்பாக்கியும் 15 ரவைகளும் தரப்பட்டுள்ளன. அதனால் வேறு கதையில்லை. வெரி சொறி! இன்னும் பத்து பதினைந்து தரப்பட்டால் அதனையும் வாங்கி வைத்துக்கொள்வேன். முப்பது வருடங்களாக நாங்கள் எங்கதை பாதுகாத்துக்கொண்டவர்கள்” என்றார்.




