11 சதவீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் – மின்சார சபையின் யோசனை!

0
53

நடப்பாண்டின் (2026) ஆரம்ப பகுதியில் மின் கட்டணத்தை 11 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான யோசனை மின்சார சபையினால் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப் பட்டுள்ளதாக மின்சார பயன்பாட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மின்சார பயன்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

மின்சார சபை மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பில் பொறியியலாளர்கள் சங்கம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. ஆனால் அந்த பேச்சுவார்த் தைகளால் எந்த நலனும் கிட்டவில்லை. கடந்த ஒரு வருடத்தில் மின்சார துறை தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் முறையாக நிறைவேற்றப்படவில்லை. தற்போது வரை மின்சார சபைக்கு தலைவர் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. இது பாரதூரமான தவறாகும். அமைச்சின் செயலாளரே சகலவற்றையும் கையாளுகிறார்.

இந்நிலையில் அமைச்சரின் ஆலோசனைக் கமைய, மின்சார கட்டணத்தை நூற்றுக்கு 11 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான கோரிக்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. 03 சதவீத நிவாரணத்தை விட மின் கட்டணத்தை அதிகரிக்கவே இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

இதேவேளை, மின்சார சபையின் சொத்துகளை 06 புதிய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியுடன் நிறைவு செய்யுமாறு மின்சக்தி அமைச்சு அறிவிப்பு விடுத்துள்ளது.

மின்சக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேஹமபாலவினால் மின்சார சபையின் பொது முகாமையாளருக்கு எழுத்துபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கமைய அதனை எதிர்காலத்தில் ஆறு நிறுவனங்களின் கீழ் நிர்வகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்போது வரையில் மின்சார சபைக்குரிய சகல சொத்துகளையும் முறையான சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனங்களுக்கு பணியாளர் குழுக்களை நியமிக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு விருப்பமில்லாத நபர்கள் அவர்களின் விருப்பத்துடன் ஓய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2,173 பணியாளர் ஓய்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களுக்கு நிவாரணம்பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகள் பெப்ரவரி மாதம் முதலாம் வாரத்துக்குள் நிறைவுசெய்யுமாறு மின்சக்தி அமைச்சு மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.

இந்த நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் முடிவில் மின்சார சபையின் கலைக்கப்பட்டு அதன்பின்னர் அதன் செயற்பாடுகள் 06 நிறுவனங்களின் கீழ் முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here