பாகிஸ்தானில், 11 தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான் எனும் அமைப்பினர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில் கடந்த 8ஆம் திகதி மேற்குறித்த அமைப்பினர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், பதுங்கியிருந்த அமைப்பினர்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையில் கடும் துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில், தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான் எனும் அமைப்பைச் சேர்ந்த அறுவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், குர்ராம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் கூட்டு நடவடிக்கையில் 5 அமைப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்தது முதல் பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.




