கடந்த சில நாட்களாக இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்கு பிராந்தியக் கடற்பகுதியின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை (Sea Surface Temperature – SST) அசாதாரணமாகக் குறைவாக, அதாவது வழக்கத்தை விட அதிக குளிராக காணப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இந்த குளிர்ந்த கடல் நீர் வடக்கிலிருந்து கிழக்கு கரையோரமாக இலங்கையின் தெற்குப் பகுதிகளுக்கு கடத்தப்படுவதாகவும், அதன் காரணமாக தெற்கு பகுதியில் காணப்படும் சற்றே அதிகமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை குறைக்கப்படுவதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
உலகளாவிய ரீதியில் பல நாடுகளின் வானிலை மற்றும் காலநிலைப் பாங்குகளைத் தீர்மானிப்பதில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மிக முக்கியமான காரணியாக விளங்குகிறது என்றும், அதனால் வடக்கு பிராந்தியக் கடற்பரப்பில் தற்போது காணப்படும் இந்த அசாதாரண குளிர் நிலை குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ‘டித்வா’ புயலுக்குப் பின்னரான நாட்களில் இலங்கையில் பதிவாகும் அதிகூடிய வெப்பநிலை பெரும்பாலும் இரத்தினபுரி மாவட்டத்திலேயே பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலைப் பாங்குகளில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது என்பதும் தெளிவாகிறது எனக் குறிப்பிட்ட அவர், காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்களில் பொதுமக்களும், அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளும் மிகுந்த கரிசனையுடன் அணுகுவது காலத்தின் அவசியமாகும் எனவும் தெரிவித்தார்.




