நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (19) காலை கனரக வாகனம் ஒன்று விதியை மீறி அதிக எடை ஏற்றி அதிக வேகமாக அத்துமீறி சென்றதாக குறித்து வீதியோரத்தில் வசிக்கும் பொது மக்கள் தெரிவித்தனர். இவ்வாறு செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு வீதி வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்து தடுப்புகள் அமைத்தாலும் தடைகளை மீறி செல்லும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறித்த வீதியூடாக கனரக வாகனங்கள் செல்வதை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் தடை செய்யப்பட்டது. இருந்தும் தற்போது தொடர்ந்து இருபுறங்களிலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் நாள்தோறும் இரவு பகல் பாராது தாராளமாக சென்று வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டிய பொறுப்பு வாய்ந்த போக்குவரத்து பிரிவினர் பெயரளவிலே ஆய்வு செய்வதால் நாளுக்கு நாள் குறித்த வீதியூடாக கனரக வாகனங்கள் சென்று விபத்து அபாயம் பெருகி வருகின்றது.
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் செல்லும் கனரக வாகனங்கள் எடை அதிகளவில் ஏற்றி செல்வதால் சாரதிகளுக்கு இடையில் வாகனங்களில் பழுது ஏற்படும்போது கூட கட்டுபாட்டில் வைக்க திணறுகின்றனர். குறித்த வீதியானது 3.2 கிலோமீட்டர் தூரம் கொண்டதும், பாரிய
வளைவுகளையும், பள்ளத்தையும் கொண்டது இதில் தற்போது தாராளமான கனரக வாகனங்கள் சென்று வருவதற்கு பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனயீனமும் பொறுப்பற்றதன்மையும் நேரடியாக மக்களை பாதிக்கின்றது.
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிக விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது. எனவே இவ்வீதி அதிக செங்குத்தான சரிவுகளையும் பாரிய வளைவுகளையும் கொண்டுள்ளதால், தகுந்த தடையாளிகளை பாவித்து வாகனங்களை செலுத்த வேண்டும் என வீதியில் இரு புறமும் பல்வேறு இடங்களில் அறிவிப்பு பலகைகளும் இவ்வீதியில் வைக்கப்பட்டுள்ளது.
எனவே நுவரெலியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸார் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் இங்கு செல்லாமல் தடுப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.




