“மாகாண சபைத் தேர்தலை இனியும் இந்த அரசால் காலம் தாழ்த்த முடியாது. இந்த அரசு அரசமைப்புக்கு ஏற்பச் செயற்படுவது உண்மையெனில் இந்த வருடம் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும். .”
– இவ்வாறு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான பேச்சுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, வெளிநபர்களின் தலையீடுகள் தவிர்க்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
எவ்வாறிருப்பினும் பொறுத்தமான நேரத்தில் இந்த இரு கட்சிகளும் உத்தியோகபூர்வமாக இணைந்து பயணிக்கும்.
மாகாண சபைத் தேர்தலை இனியும் இந்த அரசால் காலம் தாழ்த்த முடியாது.
இந்த அரசு அரசமைப்புக்கு ஏற்ப செயற்படுவது உண்மையெனில் இந்த வருடம் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் அது அரசின் தொடர்ச்சியான பயணத்துக்குச் சிறந்த பாதையல்ல.
உண்மையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். எதற்காக தேர்தல் நடத்தப்படவில்லை என்பது தெரியாது. அந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தலுக்கான நிதி காணப்பட்டது.
தாம் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு செல்வதாக இந்த அரசு கூறிக் கொண்டிருக்கின்றது. அவ்வாறெனில் ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதை அரசே கூற வேண்டும்.
அரசமைப்புக்கமைய செயற்படுவதாகக் கூறிக் கொண்டிருக்கும் இந்த அரசு கணக்காய்வாளர் நாயகம் பதவிக்குப் பொறுத்தமான ஒருவரைத் பரிந்துரைக்கத் தவறியிருக்கின்றது. ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படும் பெயர் அரசமைப்பு பேரவையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் அவரால் பரிந்துரைக்கப்பட்ட 4 பெயர்கள் அரசமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கணக்காய்வுத் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து ஒருவரது பெயர் பரிந்துரைக்கப்படுகின்றது என்றால், அதற்குள் அடுத்தடுத்த நிலைகளில் பொறுத்தமானவர் இல்லை என்பதே அர்த்தமாகும். இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்றார்.




