முன்னாள் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் பதவி நீக்கம் – சபையில் கடும் தர்க்கம்!

0
20

பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமாகப் பதவி வகித்த சமிந்த குலரத்ன பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியினருக்கும் ஆளுங்கட்சியினருக்குமிடையில் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.

பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமாகப் பதவிவகித்த சமிந்த குலரத்ன பதவி நீக்கப்பட்டமை முறையற்றது என்றும் பழிவாங்கும் நோக்கம் கொண்டது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்தப் பதவி நீக்கத்தை அரச தரப்பினர் நியாயப் படுத்தினர்.

பாராளுமன்றம் நேற்று (03) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதன்போது பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமாகப் பதவி வகித்த சமிந்த குலரத்ன பதவி நீக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்த அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ,

‘‘பாராளுமன்றத்தின் சுயாதீனத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு சபாநாயகருக்கு மாத்திரமல்ல, பாராளுமன்ற பணிக்குழாமினருக்கும் உண்டு. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார முன்னாள் சபாநாயகர்களின் குணங்களைக் குறிப்பிட்டு உரையாற்றினார். முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவையும் புகழ்ந்து பேசியிருந்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக் கமைவாகவே பாராளுமன்றப் பணிக்குழாம் தொடர்பான குழு செயற்படுகிறது. அக்குழுவில் ஆளுங்கட்சி மாத்திரமல்ல, எதிர்க்கட்சித் தலைவரும் உறுப்பினராக உள்ளார். பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பணிக்குழாம் குழுவில் தான் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

அதேபோல், விசாரணைகளை மேற்கொள் வதற்கு குழு ஒன்றும் பணிக்குழாமால் தான் நியமிக்கப்பட்டது. கிடைக்கப்பெற்ற அறிக்கைக்கமைவாகவே பிரதிச் செயலாளர் நாயகம் பதவி நீக்கப்பட்டார். குழுவில் முன்னிலையாகி அவர் தரப்பு நியாயங்களைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற வழிமுறைகளுக்கமைவாகவே தீர்மானம் எடுக்கப்பட்டது. சகல தீர்மானங்களும் எடுக்கப்பட்ட போது எதிர்க்கட்சித் தலைவரும் அவ்விடத்தில் இருந்துள்ளார்.

அரச நிர்வாக சேவையின் அதிகாரியாகவும், பொதுநிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளராகவும் செயற்பட்ட எஸ்.கே. லியனகே தலைமையில் தான் குழு நியமிக்கப்பட்டது. இவர் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தற்போது கேள்வியெழுப்புகிறார்கள். 2025.08.20 ஆம் திகதி தான் இந்தக் குழு நியமிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரும் அதற்கு இணக்கம் தெரிவித்தார். கடந்த 5 மாத காலமாக எதிர்க்கட்சித் தலைவர் இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏன் மெளனமாக இருந்தார்?

பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகத்தின் நியமனம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைவாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தவிர்த்து வேறு காரணிகள் கிடையாது’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here