உயரிய தலைவராகப் பொறுப்பேற்கத் தயாராகும் “கிம் ஜாங் உன்” மகள்!

0
13

வடகொரியாவின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜு ஏ, அந்த நாட்டின் அடுத்த உயரிய தலைவராகப் பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன. இதுகுறித்த தகவல்கள் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதன்படி தனது அதிகாரப்பூர்வ அரசியல் வாரிசாக தனது மகள் கிம் ஜு ஏ-வை, கிம் ஜாங் உன் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபகாலமாக ராணுவ அணிவகுப்புகள், ஏவுகணை சோதனைகள் மற்றும் முக்கிய அரசு விழாக்களில் கிம் ஜாங் உன்னுடன் அவரது மகள் எப்போதும் நிழல் போல தொடர்வது இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தி உள்ளது.

நாட்டின் முக்கிய ராணுவ தளபதிகள் சிறுமி ஜு ஏ-வுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்தும் புகைப்படங்கள் வெளியாகி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. தனது தந்தையை விடவும் அதிகாரமிக்க தோரணையில் வலம் வரும் ஜு ஏ-வுக்குத் தற்போது தீவிர அரசியல் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

வடகொரியா 1948-ல் உருவானது முதல் இன்றுவரை, கிம் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே அந்த நாட்டின் உச்ச அதிகாரத்தில் இருந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணாதிக்கம் நிறைந்த வடகொரிய அரசியலில், கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் ஏற்கனவே செல்வாக்குடன் விளங்குவது, கிம் ஜு ஏ ஒரு பெண் தலைவராக உருவெடுப்பதற்கு ஒரு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது. இதன் மூலம் வடகொரியாவின் எதிர்கால அதிகாரம் ஒரு பெண் தலைவரின் கைகளுக்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாகி உள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here