நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கனடா அணிக்கெதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 82 ரன்களில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரன் அதிரடியாக விளையாடி, 56 பந்துகளில் 95 ரன்கள் குவித்தார்.
இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ‘டி’ பிரிவில் இடம்பிடித்த ஆப்கானிஸ்தான், கனடா அணிகள் இந்த லீக் ஆட்டத்தில் மோதின. இரு அணிகளுமே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறாததால் இது வெறும் சம்பிரதாய ஆட்டமாக நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரன் 56 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 95 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 20 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்களை விளாசினார். குல்பதீன் நயீப் 1, அஸ்மத்துல்லா ஒமர்ஸாய் 13 ரன்கள் சேர்த்து வீழ்ந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடிய செடிகுல்லா அடல் 32 பந்துகளில் 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கனடா அணி விளையாடத் தொடங்கியது. முஜீப் உர்-ரஹ்மான், முகமது நபி மற்றும் கேப்டன் ரஷீத் கான் என வலுவான சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, கனடா பேட்ஸ்மேன்களுக்கு களத்தில் கடும் சவால் கொடுத்தது.




