சைப்ரஸில் நிறுத்தியுள்ள அமெரிக்க விமானங்கள் தாக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை!

0
3

ஈரான் அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக கூறி, கடந்த 28-ந் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தாக்குதலை தொடங்கின. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இரு நாட்டு படைகளும் நடத்திய சரமாரி தாக்குதலில் ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியும், அவருடைய குடும்பத்தினரும் பலியானார்கள். காமேனியின் மனைவி மன்சரே கொஜஸ்தே தாக்குதலில் காயமடைந்து கோமா நிலையில் இருந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை அலை, அலையாக வீசி தாக்குதலில் ஈடுபட்டது. மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைத்தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஓமன் நாட்டில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குவைத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலியானார்கள்.

இந்நிலையில், போரின் 4-வது நாளான நேற்று அதிகாலையில், சவுதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது 2 டிரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. அதில், தூதரகத்தில் சிறிய அளவிலான தீவிபத்து ஏற்பட்டது. லேசான சேதம் ஏற்பட்டதாக சவுதி அரேபிய ராணுவ அமைச்சகம் தெரிவித்தது.

தூதரக சுற்றுச்சுவர் அருகே அமெரிக்கர்கள் யாரும் நடமாட வேண்டாம் என்று அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டது.

அமீரகத்தில் 2 அமேசான் தரவு மையங்கள் உள்ளிட்ட இலக்குகள் மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. பஹ்ரைனிலும் ஒரு அமேசான் தரவு மையம் தாக்கப்பட்டது.

அதே சமயத்தில், நேற்றும் ஈரானை அமெரிக்க, இஸ்ரேல் படைகள் கலங்கடித்தன. இடைவிடாத தாக்குதல் இப்போதுதான் தொடங்கி இருப்ப தாகவும், இந்த போர் நீண்ட காலம் நீடிக்கும் என்றும் அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அதற்கேற்ப ஆயுதங்கள் குவித்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் முழுவதும் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று அதிகாலைவரை குண்டுவெடிப்பு நடந்தவண்ணம் இருந்தது. தலைக்கு மேல்விமானம் பறப்பது போன்ற சத்தம் கேட்டதாக அங்கு வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

டெஹ்ரானுக்கு 800 கி.மீ. தொலைவில் உள்ள கெர்மானில் ஈரான் விமான தளம் உள்ளது. அங்கு ராணுவ ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைப்பது வழக்கம். அந்த தளம் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 13 ஈரான் ராணுவ வீரர்கள் பலியானதாக ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்தது. டெஹ்ரானில் ஒரு ஒளிபரப்பு நிலையம் மீது 2 குண்டுகள் வீசப்பட்டதாக ஈரான் அரசு டி.வி. தெரிவித்தது. ஆனால் நல்லவேளையாக யாரும் காயம் அடையவில்லை.

இதற்கிடையே, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இயங்கி வரும் லெபனான் மீது இஸ்ரேல் படைகள் நேற்று தாக்குதலை தீவிரப்படுத்தின. ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏவுகணை வீசியதற்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் பெய்ரூட்டின் தென்பகுதியில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட் டன. கட்டிடங்களில் புகை வெளிவந்து கொண்டிருந்தது. இதில் 52 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 787 பேர் பலியானதாக ஈரான் செம்பிறை அமைப்பு தெரிவித்துள்ளது. அதுபோல். இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் இறந்துள்ளனர். அமெரிக்க தரப்பில் 6 பேர் பலியாகி இருப்பதை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால், மத்திய கிழக்கில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்கள் மீதும் பதில் தாக்குதல் நடத்தப்படும் ஈரான் ஆயுதப் படைகள் (IRGC) அமைப்பின் தலைமை தளபதி இப்ராஹிம் ஜபாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அமெரிக்கர்கள் தங்கள் பெரும்பாலான விமானங்களை சைப்ரஸில் நிறுத்தியுள்ளனர். அவர்களை வெளியேற கட்டாயப்படுத்த நாங்கள் அங்கு பல ஏவுகணைகளை ஏவுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்கு எதிராக ஈரானின் விரோதப் போக்கு அதிகரித்து வரும் நிலையில், பிராந்தியத்தில் அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில் ஈரானின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. அறிவிக்கப்பட்ட இந்த அச்சுறுத்தலுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து உடனடி பதில் எதுவும் இல்லை.

படம் – Reuters

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here