இலங்கை – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்!

0
3

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் இராணுவ மோதல்கள் காரணமாக, ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த இந்தத் தொடரில் மூன்று இருபதுக்கு 20 போட்டிகளும், மூன்று ஒருநாள் போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.

தற்போதைய போர்ச் சூழலில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இந்த போட்டிகளை நடத்துவது பாதுகாப்பானது அல்ல என இரு நாட்டு கிரிக்கெட் நிறுவனங்களும் இணக்கம் கண்டுள்ளதாக ESPNcricinfo தெரிவித்துள்ளது.

இந்த தொடரை வேறு நாடுகளுக்கு மாற்றி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்ட போதிலும், குறுகிய காலத்தில் அதற்கான போக்குவரத்து மற்றும் ஏனைய ஏற்பாடுகளை மேற்கொள்வதில் உள்ள சவால்கள் காரணமாக அது சாத்தியமற்றதாகக் கருதப்படுகிறது.

இதே மோதல் சூழல் காரணமாக, ஏற்கனவே நேபாளத்தில் நடைபெறவிருந்த ஐசிசி உலகக் கிண்ண லீக் 2 போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

அத்துடன், மேற்காசிய வான்பரப்புகள் மூடப்பட்டதால் அல்லது மட்டுப்படுத்தப்பட்டதால், உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து தமது நாடுகளுக்குத் திரும்புவதிலும் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியிருந்தன.

தற்போதைய போர்ச் சூழல் காரணமாக கிரிக்கெட் அட்டவணையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்து இரு நாட்டு கிரிக்கெட் நிறுவனங்களும் விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here