போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் கைதான 10 சந்தேகநபர்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு!

0
6

ஆழ்கடலில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, பெருமளவிலான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் ஆழ்கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, இரண்டு மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டன. தலா ஐந்து சந்தேகநபர்களுடன் பயணித்த இந்த இரண்டு படகுகளும், வியாழக்கிழமை 12ஆம் திகதி திக்-ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, குறித்த சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கைதானவர்கள் 22 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் இரணவில, மஹவெவ, மெல்சிறிபுர, வென்னப்புவ, நீர்கொழும்பு, நாகுலுகமுவ, தங்காலை, பனபோல்பிட்டிய மற்றும் கந்துர ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சோதனையின் போது குறித்த படகுகளில் இருந்து 176 கிலோகிராம் 568 கிராம் ஹெரோயின், 478 கிலோகிராம் 326 கிராம் ஐஸ், 08 வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள், 02 ரி-56 ரக துப்பாக்கிகள், ஒரு ஆ-16 ரக துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டன.

சம்பவம் தொடர்பில் பி அறிக்கையை (B Report) சமர்ப்பித்து, சந்தேகநபர்களை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர், அவர்களைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here