தொல்பொருளியல் திணைக்களத்தில் வாகனங்களுக்கு தட்டுப்பாடு!

0
11

தொல்பொருளியல் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், இங்கு 2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும், குறித்த திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை குறித்தும் ஆராயப்பட்டது.

2021-2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் 2024ஆம் ஆண்டு கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் 2026.03.19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயங்கள் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டன.

2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி இக்குழு கூடியபோது தொல்பொருளியல் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட மற்றும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள் இன்னும் குழுவிற்கு வழங்கப்படவில்லை என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியது. அதன்படி, வர்த்தமானி அறிவித்தலில் தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள், அவற்றை வர்த்தமானியில் வெளியிடாதமைக்கான காரணங்கள் மற்றும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ள காலம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றை இரண்டு வாரங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கோபா குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.

அத்துடன், தொல்பொருளியல் திணைக்களத்திற்கு மையப்படுத்தப்பட்ட தகவல் கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இது விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை குழுவிற்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை, அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய மத்திய கலாசார நிதியத்தினால் ஈட்டப்படும் வருமானத்தில் 25% தேசிய மரபுரிமைகள் தொடர்பான அமைச்சுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆண்டுதோறும் அந்த ஒதுக்கீட்டை விடக் குறைவான தொகையையே கோரியுள்ளதாகத் தெரியவந்தது.

எனவே, அமைச்சரவையின் அனுமதியுடன் பெற்றுக் கொடுக்கப்பட்ட இந்தத் தொகை எஞ்சியிருப்பதாகவும், எதிர்காலத்தில் திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நிதியில் இத்தொகையைக் குறைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

திணைக்களத்தில் நிலவும் வாகனங்களுக்கான பற்றாக்குறை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இந்த வாகனத் தட்டுப்பாடு காரணமாக செயலாற்றுகைக்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். குழு என்ற ரீதியில் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாக குழு தெரிவித்தது.

இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஹெக்டர் அப்புஹாமி, சானக மாதுகொட, சந்தர சூரிஆரச்சி மற்றும் ருவன்தில ஜயக்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here