நடிகர் விபுல் ராயின் வீட்டில் இருந்த பீரோவை திறந்து ரூ.7 லட்சம் நகை, பணம் திருடப்பட்டுள்ளது.
மும்பை கார், எஸ்.வி. ரோடு பகுதியில் உள்ள கலாநிகேதன் குடியிருப்பில் 10-வது மாடியில் டி.வி. நடிகர் விபுல் ராய் வசித்து வருகிறார். சமீபத்தில் இவரின் வீட்டுக்கு ஆன்லைன் செயலி மூலமாக வீட்டு வேலை செய்ய தீபாலி (வயது 35) என்ற பெண் வந்தார். அவர் படுக்கை அறையை சுத்தம் செய்தபோது அறையின் உள்பகுதி ஈரமாக இருப்பதால் யாரும் உள்ளே வரவேண்டாம் என கூறினார். 15 நிமிடங்களுக்கு பிறகு அவர் படுக்கை அறையை சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்தார்.
இந்தநிலையில் வேலைக்கார பெண் சென்ற பிறகு விபுல் ராய் படுக்கை அறையில் இருந்த பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த ரூ.7 லட்சம் நகை, பணம் மாயமாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் திருட்டு சம்பவம் தொடர்பாக வேலைக்கார பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




