எதிர்பாரா டுவிஸ்ட் வைத்த ராகவா லாரன்ஸ்!

0
65

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அதுகுறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதாக பரவிய தகவல்

சமீப நாட்களாக திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் களமிறங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இதனால் அவரது அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

முக்கிய முடிவை அறிவிப்பதாக தெரிவித்த லாரன்ஸ்

இந்த தகவல்களுக்கு மத்தியில், “நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து ஒரு முக்கிய விளக்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன்” என ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார்.

முதலில் ஜூன் 11-ம் தேதி காலை 9.30 மணிக்கு தனது முடிவை அறிவிக்க திட்டமிட்டிருந்த அவர், இயக்குநர் பாரதிராஜா மறைவையொட்டி அறிவிப்பை ஒரு நாள் தள்ளிவைத்தார்.

ரசிகர்களிடம் நேரடியாக கருத்து கேட்ட நடிகர்

இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ், அரசியலுக்கு வருவது தொடர்பாக ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டுள்ளார்.

அதனுடன் பகிர்ந்த பதிவில்,

“இந்த வீடியோவை பார்த்த பிறகு உங்களுடைய ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் கருத்துக்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் ‘வேண்டாம்’ என்று சொன்னால், நான் அரசியலுக்கு வரமாட்டேன். எனது சுயநலமற்ற சமூக சேவையைத் தொடர்ந்து செய்வேன்.”

“ஆம் என்றால் அரசியலுக்கு தயாராக இருக்கிறேன்”
மேலும் அதில்,

“நீங்கள் ‘ஆம்’ என்று சொன்னால், நான் அரசியலில் இறங்கத் தயாராக இருக்கிறேன். உங்களுடைய ஆசியுடன் இந்த அரசியல் பயணத்தை எப்போது, யாருடன் தொடங்கப் போகிறேன் என்பதை விரைவில் அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது;

“கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே.”

தலைவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போகிறேன் என்று அறிவித்தார். நான் அவரிடம் கேட்டேன். அவரும் “ஆமாம்” என்றார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. நானும் வருகிறேன் என்றேன்.

ஆனால் என் அம்மாவுக்கு நான் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை. “அது ஒரு சாக்கடை. அரசியலுக்கு போக கூடாது. ஓட்டுக்கு பணம் கொடுத்துத்தான் ஜெயிக்கிறார்கள். சாதி இல்லை என்று சொல்வார்கள், மதம் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் எல்லாமே இருக்கிறது. அந்த சாக்கடைக்குள் நீ போகாதப்பா. ரஜினிகாந்தும் அரசியலுக்கு வர வேண்டாம். அவரைக் கூப்பிட்டு, போக வேண்டாம் என்று நானே சொல்கிறேன்” என்றார்.

அதற்கு நான், “அம்மா, ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இன்னும் நிறைய குழந்தைகளுக்கு நல்லது செய்யலாமே?” என்றேன்.

அதற்கு அம்மா, “உன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து குழந்தைகளுக்கு நல்லது செய். அரசியலுக்கு நீ போகாதே” என்றார்.

இந்த உலகத்தில் அம்மா சொல்லை மீறி எதையும் செய்யலாம். ஆனால் அதன்பிறகு நான் உருப்பட மாட்டேன் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

அந்த நேரத்தில் கொரோனா வந்தது. அப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார். அரசியலுக்கு வர முடியாதது குறித்து அவர் மிகவும் வருத்தப்பட்டார்.

அதன்பிறகு நண்பர் விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்றார். ரஜினிகாந்த் எந்த அளவுக்கு எனக்கு நெருக்கமோ, அதே அளவுக்கு விஜய்யும் எனக்கு நெருக்கமானவர். ஏனென்றால், “மேகமாய் வந்து போகிறேன்” பாடலிலிருந்து அவருக்கு நான் நடனப் பயிற்சியாளராக இருக்கிறேன்.

அவர் அரசியலுக்கு வருகிறார் என்று கேட்டவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன். உடனடியாக அம்மாவிடம் சென்றேன். அவரிடமும் இதை பற்றி சொன்னேன்.

அதற்கு அம்மா, ” விஜய்யிடம் என்னை கூட்டிட்டு போ, அரசியலுக்கு வராதப்பா. நீ மிகவும் அமைதியான ஆள். இது ஒரு சாக்கடை என்று சொல்கிறேன்” என்றார்.

அப்போது, “நம்ம ஜாதகத்தில் அரசியல் என்று எழுதப்படவில்லை போலிருக்கிறது” என்று நினைத்தேன்.

மீண்டும் இரண்டு நாட்களுக்குப் பிறகு அம்மாவிடம் பேசினேன். அப்போதும் அதையே சொன்னார். நானும் அதை விஜய்யிடம் சொன்னேன். அதற்கு அவர், “அவர்களுக்கு இப்போது தெரியாது. வந்த பிறகு புரியும்” என்றார்.

அப்படியே நாட்கள் நகர்ந்தன. தேர்தல் வந்தது. முடிவுகள் வந்தன. எல்லாமே மாறிவிட்டது. தலைகீழாக அனைத்தையும் மாற்றிவிட்டார்.

உடனே நான் என் அம்மாவிடம் சென்றேன்.

“அம்மா, நீங்க என்ன சொன்னீங்க? பணம் கொடுத்துத்தான் ஓட்டு போடுவாங்க, சாதி இருக்கு, மதம் இருக்கு, புதிய ஆளை வரவிட மாட்டாங்க, ஜெயிக்க முடியாது என்று சொன்னீங்களே. நண்பர் விஜய் ஜெயித்துவிட்டாரே, பார்த்தீங்களா? இப்போது என்ன சொல்றீங்க?” என்று கேட்டேன்.

அதற்கு அம்மா, “ஆமாப்பா, அந்தப் பையன் எல்லாவற்றையும் மாற்றிவிட்டான்” என்றார்.

உடனே நான், “இப்போ நான் அரசியலுக்கு போகலாமா அம்மா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர், “போ கண்ணா” என்று சொன்னார்.

எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அரசியலுக்கு வருவதற்கு அம்மா ஒப்புதல் கொடுத்துவிட்டார்.

இப்போது நான் தாய்க்கு நிகராக நினைக்கும் என் ரசிகர்களிடமும் கேட்கிறேன். நான் அரசியலுக்கு வரலாமா? இந்த வீடியோவைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களிடமும் கேட்கிறேன். நான் அரசியலுக்கு வருவதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா?

நீங்கள் சொல்லுங்கள். “வர வேண்டாம்” என்று சொன்னால் வரமாட்டேன். “வா” என்று சொன்னால் வருகிறேன். உங்கள் முடிவுக்காக காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதன் மூலம் விஜய்யுடன் இணைகிறாரா ராகவா லாரன்ஸ் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. dailythanthi

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here