கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில் நடைபெற்ற ‘சல்சா ஆன் செயின்ட் கிளையர்’ (Salsa on St. Clair) வீதித் திருவிழாவின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர் மேலும் ஐவர் காயமடைந்தனர்.
இந்த கொடூர சம்பவத்தில் பலியானவர்களை நினைவுகூர்ந்து, செயின்ட் மேத்யூஸ் யுனைடெட் தேவாலயத்திற்கு (St. Matthew’s United Church) வெளியே பொதுமக்கள் திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி அஞ்சலி செலுத்தினர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஷாகுவான் குவாஷி (Shaquan Quashie – 25) மற்றும் சீசர் வெர்னாசா (Cesar Vernaza – 20) என றொரண்டோ பொலிஸ் தலைமை அதிகாரி மைரோன் டெம்கிவ் (Myron Demkiw) அடையாளம் கண்டுள்ளார்.
இவர்கள் இருவரும் இலக்கு வைக்கப்பட்டு சுடப்பட்டதாகவும், காயமடைந்த மற்ற ஐவரும் அப்பாவி பொதுமக்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து, திருவிழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இத்தகைய வன்முறைகளுக்கு எதிராக றொரண்டோ மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow) கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், முறையான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்காவிட்டால், இனி வரும் ஆண்டுகளில் இந்த விழாவை நடத்தப் போவதில்லை என விழா ஏற்பாட்டாளர்களான டிஎல்என் மீடியா குரூப் (TLN Media Group) எச்சரித்துள்ளது.




